கோல்ட்ரிப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு அளிக்க வேண்டாம்: அமைச்சர் ம.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

படவிளக்கம்: குரோம்பேட்டையில் நேற்று நடைபெற்ற நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று அங்கு, அமைக்கப்பட்டிருந்த மருத்துவ அரங்குகளை பார்வையிட்டு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். உடன் ஆட்சியர் சினேகா, பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் சோமசுந்தரம், துணை இயக்குநர் பானுமதி உள்ளிட்டோர்.
படவிளக்கம்: குரோம்பேட்டையில் நேற்று நடைபெற்ற நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று அங்கு, அமைக்கப்பட்டிருந்த மருத்துவ அரங்குகளை பார்வையிட்டு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். உடன் ஆட்சியர் சினேகா, பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் சோமசுந்தரம், துணை இயக்குநர் பானுமதி உள்ளிட்டோர்.
Updated on
1 min read

கோல்ட்ரிப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு அளிக்க வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

குரோம்பேட்டை ஹோலி ஏஞ்சல்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், முகாமில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ அரங்குகளை பார்வையிட்டு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இதில் ஆட்சியர் சினேகா, பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் சோமசுந்தரம், துணை இயக்குநர் பானுமதி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் பங்கேற்றனர்.

முகாமில் ரத்த பரிசோதனை, காசநோய், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு விதமான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. மேலும் முகாமில் பொது மருத்துவம், இதயம், எலும்பு, நரம்பியல், தோல், மகப்பேறு, குழந்தைகள், நுரையீரல், அறுவை சிகிச்சை, கண், காது மூக்கு தொண்டை, மனநலம், பல், சித்தா, இயன்முறை சிகிச்சை, கதிர் இயக்க சிகிச்சை மற்றும் சர்க்கரை நோய் உள்ளிட்ட 17 வகை மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன. மேலும் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நேற்றைய முகாமில் 1,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன.

அதன் பின்னர் அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் சாலை விபத்துகளில் சிக்கி சிகிச்சை பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தயாரான இருமல் மருந்தை சாப்பிட்ட குழந்தைகள் வடமாநிலத்தில் உயிரிழந்துள்ளது தொடர்பாக குறித்து டிரக் கண்ட்ரோல் அலுவலரிடம் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் தற்போது விசாரணை செய்து வருகிறார். விசாரணை முடிந்த பின்னர் இது குறித்த விரிவான தகவல் தெரிவிக்கப்படும்.

தமிழ்நாட்டில் அந்த வகை இருமல் மருந்து விற்பனையாகி வருகிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். காலாவதியான மருந்தை உட்கொண்டதால் குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் என்கிற ரீதியிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. கோல்ட்ரிப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in