Published : 01 Oct 2025 07:24 AM
Last Updated : 01 Oct 2025 07:24 AM

ஆயுத பூஜை களைகட்டியது: 4.80 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் - பேருந்து, ரயில்களில் கூட்டம் அலைமோதியது

சென்னை: ஆயுதபூஜை பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து 4.80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, சென்னை கோயம்பேடு, பாரிமுனை, தியாகராய நகர், பெரம்பூர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொறி, கடலை, வாழைப்பழம், இலை, தேங்காய், பழங்கள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

இதேபோல, மாநிலம் முழுவதும் ஆயுத பூஜைக்கான பொருட்களை வாங்க லட்சக்கணக்கான மக்கள் கடைவீதிகளில் திரண்டனர். இதனால் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களுக்குச் செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.சென்னையில் இருந்து நேற்று இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகள் மூலம் 2 லட்சத்துக்கும் மேற்பட் டோர் சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.

இந்நிலையில், நேற்றும் வழக்கம்போல ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட் டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தடுக்க, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து சோதனைச்சாவடி ஆய்வாளர்கள் ஆகியோரைக் கொண்டு சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளைக் கண்டறிந்து, அபராதம் விதிப்பது, வரிவசூல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன.

சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் வகையில் 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இவற்றின் வாயிலாக 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்தனர். இவ்வாறு அரசுப் பேருந்துகள், ரயில்கள், ஆம்னி பேருந்துகள் உள்ளிட்டவை மூலம் 4.80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x