Published : 30 Sep 2025 06:11 AM
Last Updated : 30 Sep 2025 06:11 AM
சென்னை: சென்னையில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கும் மைக்ரோசிப் பொருத்தும் பணி ஒரு வாரத்தில் தொடங்கப்படும் என்று மாமன்ற கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்தார். சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம், மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்னிலையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.
கூட்டம் தொடங்கியதும் கரூரில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு, அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் கூட்டத்தில் பேசிய மாநகராட்சி கவுன்சிலர்கள் பலர் நாய் தொல்லையைக் கட்டுப்படுத்த வலியுறுத்தினர். மைக்ரோசிப் பொருத்தும் பணியின் தற்போதைய நிலவரம் மற்றும் பயன்கள் குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் அளித்த பதில்: மாநகராட்சி சார்பில் பிடிக்கப்படும் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் போது மைக்ரோ சிப், நாயின் உடலில் பொருத்தப்பட்டு வருகிறது. வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கும் மைக்ரோ சிப் பொருத்தும் பணி அடுத்த வாரம் தொடங்கப்பட உள்ளது.
இந்த மைக்ரோ சிப்பில் நாய்களின் இனப்பெயர், அங்க அடையாளம், உரிமையாளர் பெயர், ரேபிஸ் நோய்க்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட விவரம் உள்ளிட்டவை பதிவு செய்யப்படும். மாநகராட்சி சார்பில் புளியந்தோப்பு, திரு.வி.க.நகர், லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம் ஆகிய 6 இடங்களில் செல்லப்பிராணிகளுக்கான சிகிச்சை மையங்கள் மாநகராட்சி சார்பில் செயல்படுத்தப்படுகின்றன.
அங்கு கொண்டுவரப்படும், வீட்டு நாய்களுக்கும் மைக்ரோசிப் பொருத்துவது, ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இலவசமாக மேற்கொள்ளப்படும். அண்மைக்காலமாக வெளிநாடுகளைச் சேர்ந்த உயர்ரக நாய்களை ஆசையாக வாங்கிவிட்டு, பராமரிப்பு செலவு அதிகமாக இருப்பதை உணர்ந்து அவற்றை தெருவில் விட்டுவிடுகின்றனர். வளர்ப்பு நாய்களுக்கு சிப்களை பொருத்தும்போது, இதுபோன்று வளர்ப்பு நாய்களை தெருவில் விடுவது யார் எனக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் 2024-25 கல்வியாண்டில் மாநகராட்சி பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொது தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்கள், 2025-26 கல்வியாண்டின் விடுமுறை நாட்களில் திருச்சி என்ஐடி உள்ளிட்ட இடங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர். இதற்கான முன்பணமாகரூ.20 லட்சம் ஒதுக்க அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பருவ மழை தொடங்கவுள்ளதால், 81 இடங்களில் மோட்டார்பம்புகளை இயக்க 189 எலக்ட்ரீஷியன்கள், 240 உதவியாளர்கள் ஆகியோரை 120 நாட்களுக்கு தற்காலிகமாக நியமிக்க கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
மேலும் பள்ளிக்கரணையில் 30 டன் திறன், மணலி மண்டலம் சின்ன சேக்காட்டில் 50 டன் திறன் கொண்ட பிளாஸ்டிக் பேலிங் மையங்கள் அமைக்கவும், மாநகராட்சி பள்ளிகளில் 141 உடற்கல்வி ஆசிரியர்களை தற்காலிகமாக பணியமர்த்தவும், கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்துக்கு பின்புறம் ரூ.9.80 கோடியில் மயானம் அமைக்கவும்.
மருத்துவ முகாம்களுக்கான உபகரணங்களை கொண்டு செல்லவும், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருந்துகளை கொண்டு செல்லவும் சிஎன்ஜி-ல் இயங்கும் 15 வாகனங்களை ரூ.1.85 கோடியில் வாங்கவும், செனாய் நகரில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்புக்கு சொந்தமான விளையாட்டுத் திடலுக்கு பாவேந்தர் பாரதிதாசன் பெயர் சூட்டவும் அனுமதி வழங்கிதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் மொத்தம் 65 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT