திருப்பதி பிரம்மோற்சவம்: 28 டன் எடை, 32 அடி உயரம் கொண்ட தங்க ரதம்

திருப்பதி பிரம்மோற்சவம்: 28 டன் எடை, 32 அடி உயரம் கொண்ட தங்க ரதம்

Published on

திரு​மலை: திருப்பதி ஏழு​மலை​யானின் தங்க ரதம் 28 டன் எடை​யில், 32 அடி உயரம் கொண்​ட​தாகும். ஆண்​டுக்கு 3 முறை மட்​டுமே பக்​தர்​கள் இதனைக் காண இயலும்.

திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானம் சார்​பாக ஆண்​டாண்டு காலமாக தேர்த் திரு​விழாவை வெகு சிறப்​பாக நடத்தி வரு​கின்​றனர். ஒவ்​வொரு பிரம்​மோற்​சவத்​தி​லும் தேர்த்திரு​விழா 8-ம் நாள் காலை பிரம்​மாண்​ட​மான முறை​யில் மாட வீதி​களில் உலா வரும்.அதில் ஸ்ரீதே​வி, பூதேவி சமேத​ராய் மலை​யப்​பர் பக்​தர்​களுக்கு அருள் புரிவது ஐதீகம். ஆனால், இத்​துடன் ஒரு வெள்ளி தேரை​யும் திருப்​பதி தேவஸ்​தானத்​தின் உரு​வாக்​கினர். அந்​தத் தேரில் பிரம்​மோற்சவ நாட்​களில் உற்சவ மூர்த்​தி​கள் 6-ம் நாள் பவனி வந்து பக்​தர்​களுக்கு காட்​சி​யளித்​தனர்.

ஆனால், அந்த வெள்​ளித் தேரில் அடிக்​கடி மராமத்து பணி​கள் நடை​பெற்​ற​தால், அதனை மாற்ற வேண்​டும் என தேவஸ்​தான அதிகாரி​கள் தீர்​மானித்​தனர். இந்நிலையில், வெள்ளித் தேருக்கு பதிலாக தங்கத் தேரை ஏற்பாடு செய்யவும் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, தங்க ரதத்தை செய்ய தமிழக கைவினை தயாரிப்பு சங்கத்துக்கு டெண்டர் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் 18 கைவினை கலைஞர்கள் திருமலைக்கு வந்து, அங்கேயே தங்கி இருந்து தங்கத்தேரை தயாரித்தனர். 28 டன் எடை கொண்ட இந்த தங்கத் தேர் 32 அடி உயரம் உள்ளதாகும். இதில் 2,900 கிலோ செப்பு தகடுக்கு 74 கிலோ எடையுள்ள தங்க முலாம் பூசப்பட்டது. இதில் 25,000 கிலோ மரம், 18 அங்குலம் செப்பு தகடுகள் 9 அடுக்குகளாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.

இதனை தயாரிக்க அப்போது ரூ.24.34கோடி செலவானது என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு 2013-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 30-ம் தேதி இதே நாளில் காலை 9.05 மணிக்கு இந்த தங்க ரதத்தின் முதல் தேரோட்டம் நடந்தது. இன்றோடு இந்த தங்க ரதம் உருவாக்கப்பட்டு சரியாக 12 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஆண்டுதோறும் இந்த தங்க ரதம் பிரம்மோற்சவம், ரத சப்தமி, ஆனிவார ஆஸ்தானம் ஆகிய 3 நாட்களில் மட்டுமே கோயிலில் வலம் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in