

சென்னை: பிரம்மோற்சவத்தை ஒட்டி திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருப்பதி திருமலையில் பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. இதை ஒட்டி பக்தர்கள் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, கும்பகோணம், நாகப்பட்டினம், செங்கோட்டை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து திருப்பதிக்கு அக்.6-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது.
இவ்வாறு இயக்கப்படும் பேருந்துகளுக்கு முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையை பக்தர்கள் முழுமையாக பயன்படுத்தி பயணம் மேற்கொள்ள www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் tnstc செயலி மூலம் முன்பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.