கரூர் துயரம்: தவெக தலைவர் விஜய்யுடன் பேசிய ராகுல் காந்தி!

கரூர் துயரம்: தவெக தலைவர் விஜய்யுடன் பேசிய ராகுல் காந்தி!
Updated on
1 min read

சென்னை: கடந்த சனிக்கிழமை (செப்.27) அன்று கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்துக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக தவெக தலைவர் விஜய்யிடம், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தொலைபேசி மூலம் பேசினார்.

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவிக்க காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, தவெக தலைவர் விஜய்யிடம் தொலைபேசியில் பேசியது தொடர்பாக அக்கட்சி வட்டாரம், "எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தவெக தலைவர் விஜய்யை அழைத்து இரங்கல் தெரிவித்தார்" என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, நேற்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடனும் ராகுல் காந்தி பேசினார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "எனது அன்பு சகோதரர் ராகுல் காந்தி, என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கரூரில் நடந்த துயர சம்பவம் குறித்து மனமார்ந்த கவலையைத் தெரிவித்ததற்கும், சிகிச்சையில் உள்ளவர்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விசாரித்ததற்கும் நன்றி" என்று கூறியிருந்தார்.

செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய் நடத்திய பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் இரண்டு பேர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in