கரூரில் இன்று நடைபெறவிருந்த தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் ரத்து: அன்புமணி

கரூரில் இன்று நடைபெறவிருந்த தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் ரத்து: அன்புமணி
Updated on
1 min read

சென்னை: கரூரில் இன்று நடைபெறவிருந்த தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் ரத்து செய்யப்படுவதாக பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கரூரில் தவெக பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சொந்தங்களுக்கு இரங்கல் செலுத்தும் வகையிலும், அவர்கள் குடும்பங்களின் துயரத்தை பகிர்ந்து கொள்ளும் வகையிலும், கரூர் உழவர் சந்தைப் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று மாலை நடைபெறவிருந்த எனது தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் ஒத்திவைக்கப்படுகிறது. பரப்புரைக் கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு பாமக நிறுவனர் மற்றும் தலைவர் இராமதாஸ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேற்று இரவு கரூரில் நடைபெற்ற ஒரு கூட்ட நெரிசலில் சிக்கி, சில மணித்துளிகளில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

இதில் குழந்தைகளும், பெண்களும் உயிரிழந்திருப்பது சொல்லொனா துயரத்தை ஏற்படுத்துகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இறந்தவர்கள் குடும்பத்திற்கு அதிகப்படியான நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் எனவும் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in