பெருங்களத்தூரில் கண்துடைப்புக்காக கட்டப்பட்டுள்ள உரக்கிடங்கு - வீணாகும் மக்கள் பணம்

பெருங்களத்தூரில் கண்துடைப்புக்காக கட்டப்பட்டுள்ள உரக்கிடங்கு - வீணாகும் மக்கள் பணம்
Updated on
2 min read

பெருங்களத்தூரில் கண்துடைப்புக்காக கட்டப் பட்டுள்ள உரக்கிடங்கால் ரூ.1 கோடி மதிப்பிலான மக்களின் வரிப் பணம் வீணாகியுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுத்து உரக்கிடங்கை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தாம்பரம் மாநகராட்சி, 4-வது மண்டலம், பெருங்களத்தூர் பகுதியில் உள்ள 54, 55-வது வார்டுகளில் சேகரமாகும் குப்பை, கன்னடப் பாளையம் கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகிறது. குப்பைகளை கொண்டு உரம் தயாரிக்க ஏதுவாக 55-வது வார்டில் உள்ள மெட்ரோ கிளாசிக் ஹவுசிங் லேஅவுட்டில் உள்ள அரசு இடத்தில் ரூ.50 லட்சம் செலவில் உரக்கிடங்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டது.

குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்க சுமார் 50 லட்சத்துக்கும் மேல் செலவு செய்து இயந்திரங்கள் வாங்கப்பட்டு பயன்படுத்தப்படாமல் வைக்கப்பட்டுள்ளன. கிடங்கு இருக்கும் இடத்தை சுற்றி புதர் மண்டி காடுபோல் காட்சியளிக்கிறது. இந்த இடத்துக்கு செல்வதற்கு போதிய சாலை வசதி ஏற்படுத்தவில்லை. அதனால் உரக்கிடங்கை ஒரு வருடத்துக்கு மேலாக பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் பூட்டியே வைத்துள்ளனர். இதனால் ரூ.1 கோடி மதிப்பிலான மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.

முறையான சாலை வசதியே இல்லாத இடத்தில், எப்படி உரக்கிடங்கு கட்டினார்கள் என்றும் கமிஷன் பெறுவதற்காகவே அதிகாரிகள் இந்த உரக்கிடங்கை அமைத்துள்ளனர் என்றும், பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த விவகாரத்தில் மாநகராட்சி ஆணையர் தலையிட்டு உரக்கிடங்கை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த மூவேந்தர் கூறியது: பெருங்களத்தூரில் குப்பைகளை தரம் பிரித்து, இயற்கை உரம் தயாரிப்பதற்காக இந்த உரக்கிடங்கு அமைக்கப்பட்டது. பணிகள் முடிந்து ஓராண்டு ஆன நிலையில், இதுவரை இந்த உரக்கிடங்கில் குப்பைகளை தரம் பிரித்து இயற்கை உரம் தயாரிக்கும் எந்த பணியும் நடைபெறவில்லை. இந்த உரக்கிடங்கு கண்துடைப்புக்காகவும், கணக்கு காட்டுவதற்காகவும் மட்டுமே கட்டப்பட்டுள்ளது.

மாநகராட்சியில் மக்களின் வரிப்பணத்தில் என்ன திட்டம் நடக்கிறது? அந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளதா? என்பதை உள்ளாட்சி பிரதிநிதிகளும் கண்டு கொள்வதில்லை. சட்டமன்ற, மக்களவை உறுப்பினரும், ஆணையரும் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது. எனவே, தமிழக அரசு இதில் தனி கவனம் செலுத்தி, செயல்படாமல் உள்ள இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in