திரைப்படம், நாடகத்துறையில் புகழ்பெற்ற ஜெய்சங்கர், எஸ்.வி.வெங்கட்ராமன் பெயர்களில் சாலை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

திரைப்படம், நாடகத்துறையில் புகழ்பெற்ற ஜெய்சங்கர், எஸ்.வி.வெங்கட்ராமன் பெயர்களில் சாலை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
Updated on
1 min read

சென்னை: கிண்டியில் ரூ.23.10 கோடியில் கட்டப்பட்ட புவியியல், சுரங்கத்துறை அலுவலகம் மற்றும் நடிகர் ஜெய்சங்கர், எஸ்.வி.வெங்கட்ராமன் பெயர்களில் சென்னையில் சாலை, தெருக்களின் பெயர்ப் பலகைகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், இயற்கை வளங்கள் துறையின் சார்பில், கிண்டி தொழிற் பேட்டை வளாகத்தில் தரை மற்றும் 4 தளங்களுடன் 40,528 சதுர அடி கட்டிடப் பரப்பளவில் ரூ.23.10 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் தலைமை அலுவலகக் கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

இதுதவிர, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், ‘மக்கள் கலைஞர்’ என்றும் ‘தமிழ் சினிமாவின் ஜேம்ஸ் பாண்ட்’ என்றும் அழைக்கப்பட்ட திரைப்பட நடிகர் ஜெய்சங்கர் வசித்துவந்த நுங்கம்பாக்கம், கல்லூரி சாலைக்கு `ஜெய்சங்கர் சாலை' என்றும், நாடக நடிகரும், தமிழகத்தின் முதல் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளரும், அரிமா சங்கத்தில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவரும், நடிகர் எஸ்.வி.சேகரின் தந்தையுமான எஸ்.வி.வெங்கட்ராமன் வசித்து வந்த மந்தைவெளிப்பாக்கம் 5-வது குறுக்கு தெருவுக்கு `எஸ்.வி.வெங்கட்ராமன் தெரு' என்றும், புதிய பெயர் சூட்டப்பட்ட சாலைகளின் பெயர்ப் பலகைகளை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பணி நியமன ஆணை: மேலும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறையில் 38 பேருக்கும், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத் தின் சார்பில் 18 பேருக்கும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 6 பேருக்கும் என மொத்தம் 62 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.ரகுபதி, அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ், சென்னை மேயர் ஆர்.பிரியா, இயற்கை வளங்கள் துறை செயலர் சுன்சோங்கம் ஜடக் சிரு, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் தா.கார்த்திகேயன், மீன்வளம், பால்வளத் துறை செயலர் நா.சுப்பையன், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமர குருபரன் புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநர் த.மோகன், ஜெய்சங்கர் மற்றும் எஸ்.வி.சேகர் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in