Published : 27 Sep 2025 05:44 AM
Last Updated : 27 Sep 2025 05:44 AM
சென்னை: 2047-ம் ஆண்டில் கப்பல் கட்டுமானத் துறையில் உலக அளவில் இந்தியா முன்னணி நாடாகத் திகழும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் கூறினார். சென்னை கிழக்கு கடற்கரைச்சாலை செம்மஞ்சேரியில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.
இதில் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் பங்கேற்று, பல்கலை. அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தங்கப்பதக்கங்கள் அணிவித்து, பட்டங்களை வழங்கினார். வெவ்வேறு படிப்புகளில் 2,196 பேர் பட்டம் பெற்றனர்.
பின்னர், மத்திய அமைச்சர் பேசியதாவது: உலக அளவில் கப்பல் போக்குவரத்துக்கு தேவையான மனித வளத்தை இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் உருவாக்கி வருகிறது.
இத்துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகி வருவதால், கப்பல் போக்குவரத்து சார்ந்த படிப்புகளை படிக்கும் மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. கடந்த 10 ஆண்டுக்கு முன்பு நம் நாட்டில் 1.25 லட்சமாக இருந்த மாலுமிகளின் எண்ணிக்கை தற்போது 3 லட்சமாக அதிகரித்துள்ளது.
கப்பல் கட்டுமானத் துறையில் 2047-ல் உலகின் 5 முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும். அதற்கான உத்திகள் மற்றும் செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டு, உலகளாவிய உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. கப்பல் கட்டுதல், பழைய கப்பல்களை உடைத்தல் மற்றும் மறு சுழற்சி செய்தல் போன்ற தொழில்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது. இதற்காக விசாகப்பட்டினத்தில் சிறப்பு தொழில்நுட்ப மையம் நிறுவப்பட்டுள்ளது.
கடல்சார் துறையின் வளர்ச்சிக்காக மத்திய அரசு ரூ.70 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. அண்மையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், கடல் சார்ந்த 3 அம்சங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது இந்திய கப்பல் போக்குவரத்து துறையில் பெரிய எழுச்சியை உண்டாக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
மத்திய துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறைச் செயலர் டி.கே.ராமச்சந்திரன் சிறப்புரையாற்றினார். அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசும்போது, தேசிய நீர்வழிப்பாதையாக அங்கீகரிக்கப்பட்டுள்ள, 796 கி.மீ. தொலைவு கொண்ட காக்கிநாடா - மரக்காணம் இடையிலான பக்கிங்ஹாம் கால்வாய் சரக்கு போக்குவரத்து திட்டத்தை விரைந்து செயல்படுத்துமாறு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். முன்னதாக, துணைவேந்தர் மாலினி வி.ஷங்கர் வரவேற்று, ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT