கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கு குறித்து தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில் சேலம் தேசிய நெடுஞ்சாலையின் அருகே ஏமப்பேர் ரவுண்டானாவில் உள்ள 5 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் 46.30 கோடி ரூபாய் மதிப்பில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்ட வருகிறது. இதை எதிர்த்து, கள்ளக்குறிச்சி அண்ணா நகரை சேர்ந்த குமரேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த பொதுநல வழக்கில், கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக எந்த ஓர் அறிவிப்பை மாவட்ட ஆட்சியரோ நகராட்சி ஆணையரோ வெளியிடவில்லை என்று தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி நகராட்சி சார்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்க சரியான இடத்தை தேர்வு செய்வது குறித்து மாநகராட்சி கூட்டம் கூட்டப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், இந்த நிலையில் தனியாரிடமிருந்து பெறப்பட்ட நிலத்தில் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் அமைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ள பகுதி நீர்நிலைப் பகுதி என்றும், இதனால் பல கால்வாய்கள் அழிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பொதுமக்களின் எதிர்ப்புகளை கருத்தில் கொள்ளவில்லை என்றும், புதிதாக கட்டப்பட உள்ள பேருந்து நிலையம் நகர் பகுதியில் இருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்திலும், அதேபோல மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 9 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார். விதிகளை மீறி பேருந்து நிலையம் அமைக்கப்படுவதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா, நீதிபதி அருள்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஓம் பிரகாஷ் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதால் தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இடைக்கால தடை விதிக்க மறுத்து, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 24-ம் தேதி ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in