மாதம்பட்டி ரங்கராஜ் நிறுவனம் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை: ஜாய் கிரிசில்டா ஐகோர்ட்டில் தகவல்

மாதம்பட்டி ரங்கராஜ் நிறுவனம் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை: ஜாய் கிரிசில்டா ஐகோர்ட்டில் தகவல்
Updated on
2 min read

சென்னை: பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தில் தங்களை தொடர்புபடுத்தி பேச ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரி மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாக ஆடை வடிவமைப்பு நிபுணரான ஜாய் கிரிசில்டா, பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக போலீஸில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தையும் சமூக வலைதளங்களில் டேக் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை தொடர்புபடுத்தி பேச ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரி மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிட்டாலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு, நீதிபதி என். செந்தில்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் மற்றும் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆகியோர் ஆஜராகி, கிரிசில்டாவின் சமூக வலைதள பதிவுகளால், ஆகஸ்ட் 3 ம் தேதி முதல் செப்டம்பர் முதல் வாரம் வரை ரூ.11 கோடியே 21 லட்சத்து 25 ஆயிரத்துக்கு வர்த்தக ரீதியாக கேட்டரிங் ஆர்டர்கள் ரத்தாகியுள்ளது.

நிறுவனத்தின் ஒரு இயக்குநரின் தனிப்பட்ட விவகாரத்துக்காக இந்த விவகாரத்தில் நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இணையதளத்தில் கம்பெனி பற்றி தேடினால், மெனு கார்டுக்கு பதில், கிரிசில்டாவின் வீடியோ தான் வருகிறது அனைத்தும் பணத்துக்காகவே நடந்துள்ளது.

ஏற்கெனவே நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி வழக்கில் சமூக வலைதளங்களை தனிப்பட்ட நோக்கத்துக்காக பயன்படுத்தக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு சமூக வலைதள பதிவுகளை நீக்க உத்தரவிட்டது. அதுபோல ஜாய் கிரிசில்டாவின் பதிவுகளையும் நீக்க உத்தரவிட வேண்டும், என வாதிட்டனர்.

ஜாய் கிரிசில்டா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ். பிரபாகரன், சமூக வலைதள பதிவுகளில், மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் பற்றி எதையும் குறிப்பிடவில்லை. அவர்களின் வர்த்தக நடவடிக்கை குறித்து எதையும் பதிவிடவில்லை. ரூ.11 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறும் நிலையில், கேட்டரிங் ஆர்டர் எப்போது புக் செய்தனர், எப்போது ரத்து செய்யப்பட்டது, எவ்வளவு அட்வான்ஸ் பெறப்பட்டது, எவ்வளவு அட்வான்ஸ் திரும்ப கொடுக்கப்பட்டது என எந்த விவரங்களையும் தெரிவிக்கவில்லை என வாதிட்டார்.

மேலும் திருமணம் செய்து ஏமாற்றியது குறித்து மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக போலீஸில் புகார் அளித்த மூன்று நாட்களில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்ற வழக்குக்கு வர்த்தக வண்ணம் கொடுக்க முயற்சிக்கின்றனர் என வாதிட்டார். அப்போது ரங்கராஜ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன், ரங்கராஜ் தனக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பார் என்றார். அதையடுத்து, இந்த வழக்கின் உத்தரவை நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in