Published : 21 Aug 2018 08:05 PM
Last Updated : 21 Aug 2018 08:05 PM

இந்து தமிழ் திசை பத்திரிகையாளர் ந.வினோத்குமார் எழுதிய நூலுக்குப் பரிசு

'தமிழ்நூல் வெளியீடு மற்றும் விற்பனை மேம்பாட்டுக் குழுமம்' வழங்கும் சி்றந்த நூல்களுக்கான பரிசுக்கு 'இந்து தமிழ் திசை' பத்திரிகையாளர் ந.வினோத்குமார் எழுதிய வேட்டைக்கார ஆந்தையின் தரிசனம் என்ற சூழலியல் நூல் தேர்வாகியுள்ளது.

தமிழ் நூல் வெளியீடு மற்றும் விற்பனை மேம்பாட்டுக் குழுமத்தின் சார்பில் சென்னை புத்தகத் திருவிழா 4-வது ஆண்டாக ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 18 முதல் 27 வரை நடைபெறும் இப்புத்தகக் காட்சியில் 200-க்கும் மேற்பட்ட அரங்குகளும், அகில இந்திய அளவில் பதிப்பகங்களும் பங்கு பெற்றுள்ளன.

இத்திருவிழாவின் ஒருபகுதியாக 2017 - 2018 ஆண்டுகளில் 10 பிரிவுகளில் வெளியான சிறந்த நூல்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் 'இந்து தமிழ் திசை' பத்திரிகையாளர் ந.வினோத்குமார் எழுதிய வேட்டைக்கார ஆந்தையின் தரிசனம் நூல் சூழலியல் சார்ந்த சிறந்த புத்தகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 'தி இந்து' வெளியிட்ட நூல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், குணா கவியழகன் எழுதிய கர்ப்ப நிலம் நூல் சிறந்த நாவலாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. யெஸ்.பாலபாரதி எழுதிய புதையல் டைரி நூல் சிறந்த சிறுவர் இலக்கியமாகவும், மனோஜ் எழுதிய அப்சரஸ் நூல் சிறந்த சிறுகதைத் தொகுப்பாகவும், வெய்யில் எழுதிய மகிழ்ச்சியான பன்றிக்குட்டி நூல் சிறந்த கவிதைத் தொகுப்பாகவும், ஆ.திருநீலகண்டன் எழுதிய நீடாமங்கலம் சாதிய கொடுமையும் திராவிட இயக்கமும் நூல் சிறந்த கட்டுரைத் தொகுப்பாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

லியோ ஜோசப் எழுதிய இந்திய மொழிச் சிறுகதைகள் சிறந்த மொழிபெயர்ப்பு நூலாகவும், அ.வெண்ணிலா எழுதிய எங்கிருந்து தொடங்குவது சிறந்த பெண்ணிய நூலாகவும், ஆயிஷா இரா.நடராசன் எழுதிய இந்திய கல்விப் போராளிகள் சிறந்த கல்வி நூலாகவும், ந.முத்துமோகன் எழுதிய இந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும் சிறந்த வரலாற்று நூலாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 27-ம் தேதி திங்கட்கிழமை மாலையில் நடைபெறும் நிறைவு விழாவில் 10 நூல்களை எழுதிய எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எழுத்தாளர்களுக்குப் பரிசளிக்க உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x