Published : 24 Sep 2025 06:35 AM
Last Updated : 24 Sep 2025 06:35 AM
சென்னை: தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை இடையிலான பாலத்துக்கான எஃகு கட்டமைப்புகளின் தரச் சோதனை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளில் எந்தவித சமரசமும் செய்யப்பட மாட்டாது என்று தயாரிப்பிடத்தில் நேரில் ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 3.20 கி.மீ தூரத்துக்கு ரூ.621 கோடியில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணியை விரைவில், தரமான முறையில் நிறைவு செய்யும் வகையில், முன்னோக்கிய கட்டமைப்பு (Pre-fabricated) முறையில், 15 ஆயிரம் டன் எஃகுக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இதற்கான உற்பத்தி பணிகள் வதோதரா, ஹைதராபாத் உள்ளிட்ட 5 நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளில் நடைபெறுகின்றன. இப்பணிகளை நேற்று அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். குஜராத் மாநிலம், வதோதராவில் உள்ள கே.பி. கிரீன் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வரும் முன் வார்க்கப்பட்ட எஃகு தூண்கள் (Pier), மேல் தாங்கிகள் (Pier-Cap), உத்திரங்கள் (Girder) ஆகியவற்றின் உற்பத்தியையும், தரத்தையும், சோதனைச் சான்றுகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.
இதுகுறித்து அமைச்சர் வேலு கூறும்போது, “மேம்பாலப் பணிகள் திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவு செய்யப்படுவதை உறுதி செய்ய தினசரி கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. தரச்சோதனை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளில் எந்தவித சலுகையும் கிடையாது.
இந்த மேம்பாலப் பணிகள் நிறைவடைந்தவுடன், அண்ணா சாலைப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும், தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையேயான பயண நேரம் பெரிதும் குறையும்” என்றார். ஆய்வின்போது, நெடுஞ்சாலைத் துறை தலைமை பொறியாளர் (கட்டுமானம், பராமரிப்பு) கு.கோ.சத்தியபிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT