சாலை விபத்தில் உயிரிழந்த திமுகவினர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் - ஸ்டாலின் வழங்கினார்

சாலை விபத்தில் உயிரிழந்த திமுகவினர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் - ஸ்டாலின் வழங்கினார்
Updated on
1 min read

சென்னை: சாலை விபத்தில் மரணமடைந்த 3 கழக உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு திமுக சார்பில் தலா ரூ.10 லட்சம் வீதம் மொத்தம் ரூ.30 லட்சம் குடும்ப நிவாரண நிதியை திமுக தலைவர் ஸ்டாலின் வழங்கினார்.

இது தொடர்பாக திமுக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மதுரையில் 1.6.2025 அன்று நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில், மு.க.ஸ்டாலின், "கழக உறுப்பினர்கள் யாராவது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் இறந்து போகும் சூழல் ஏற்பட்டால், இறந்த உறுப்பினரின் குடும்ப வாரிசுகள் 21 வயதுக்கு குறைவாக இருந்தால் அந்தக் குடும்பத்துக்கு தலைமைக் கழகத்தின் சார்பில் பத்து லட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும். அந்தப் பிள்ளைகளின் படிப்பு, குடும்பச் சூழலுக்கு இந்த நிதி உதவும்" என்று அறிவித்திருந்தார்.

அந்த வகையில், கடந்த 2.8.2025 அன்று விபத்தில் மரணமடைந்த திண்டிவனம், இறையனூரைச் சேர்ந்த சரிதா - 12.6.2025 அன்று ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த க.முத்தமிழ்செல்வன் - 23.7.2025 அன்று ஈரோடு மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த வே.சரவணன் ஆகியோர் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கியதைத் தொடர்ந்து,

5.6.2025 அன்று திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கழக உறுப்பினரான எம்.விக்னேஷ், திருவாரூர்-கும்பகோணம் மெயின் ரோடு, வடகண்டம் ரைஸ்மில் வளைவில், வாகன விபத்தில் சிக்கியும் - 5.6.2025 அன்று கடலூர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கழக உறுப்பினரான குப்புசாமி, கும்பகோணம்-சென்னை சாலையில் கீழ்வடக்குத்து தவபாலன் வீட்டின் எதிர் சாலையில் வாகன விபத்தில் சிக்கியும் - 23.7.2025 அன்று காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கழக உறுப்பினரான கே.ஏ.ராம்பிரசாத், ஜிஎஸ்டி சாலை சீனிவாசபுரம் சிக்னலில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் வாசலில் நின்றிருந்தபோது அரசுப் பேருந்து மோதியும் சம்பவ இடத்திலேயே மூன்று பேரும் உயிரிழந்து விட்டனர்.

விபத்தில் சிக்கி உயிரிழந்த மேற்குறிப்பிட்ட மூவரின் குடும்ப நிவாரண நிதியாக, தலா ரூபாய் பத்து லட்சம் வீதம் ஆக மொத்தம் ரூபாய் 30 லட்சத்திற்கான காசோலையினை, திமுக தலைவர் ஸ்டாலின் இன்று காலை, அண்ணா அறிவாலயத்தில் வழங்கினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in