சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு ஒப்படைக்க அலுவலகம் திறப்பு

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு ஒப்படைக்க அலுவலகம் திறப்பு
Updated on
1 min read

மெட்ரோ ரயில்களில் பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு ஒப்படைக்கும் விதமாக, சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இரண்டு வழித் தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் நாள் தோறும் 3 லட்சம் பேர் பயணிக்கின்றனர். பயணிகள் பாதுகாப்பு, வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மெட்ரோ ரயில் நிறுவனம் எடுக்கிறது. அந்த வகையில், பயணிகள் தவறவிட்ட பொருட்களை ஒப்படைக்க, மீட்டெடுக்கப்பட்ட பொருட்கள் அலுவலகம், சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் திறக்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலகத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் மனோஜ் கோயல், (அமைப்புகள் மற்றும் இயக்கம்), திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை ஆலோசகர் கோபிநாத் மல்லையா, (இயக்கம் மற்றும் பராமரிப்பு), பொது மேலாளர் எஸ்.சதீஷ் பிரபு, (இயக்கம் மற்றும் பராமரிப்பு), சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இதுவரை, தனித்தனி மெட்ரோ நிலையங்கள் வாயிலாக, பயணிகளுக்கு இழந்த பொருட்கள் மீட்டு தரப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எடுத்துக் கொண்ட சிறப்பு முயற்சிகளின் மூலமாக, 74 சதவீதம் பொருட்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளன. இப்போது, இந்த அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளதால், பயணிகள் நேரடியாக சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் உள்ள இந்த அலுவலகத்தை அணுகி, தங்களின் பொருட்களை எளிதில் பெற்றுக்கொள்ள முடியும்.

தவறவிட்ட பொருட்கள் தொடர்பான விவரங்களுக்கு LFO@cmrl.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும், https://chennaimetrorail.org/lost-and-found-enquiry என்ற இணையதளம் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in