மாணவர்களிடம் சாதிய உணர்வு போன்ற பிற்போக்குத்தனம் வந்துவிடக் கூடாது: ஆசிரியர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

மாணவர்களிடம் சாதிய உணர்வு போன்ற பிற்போக்குத்தனம் வந்துவிடக் கூடாது: ஆசிரியர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்
Updated on
2 min read

சென்னை: ​மாணவர்​களிடம் சாதிய உணர்வு , பாலின பாகு​பாடு போன்ற பிற்​போக்​குத்​தனங்​கள் தலை​யெடுக்​காமல் பார்த்​துக்​கொள்ள வேண்​டும் என்று ஆசிரியர்களுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.

பள்​ளிக்​கல்​வித் துறை சார்​பில் முப்​பெரும் விழா சென்னை நேரு உள்​விளை​யாட்டு அரங்​கில் நேற்று நடை​பெற்​றது. இதில்புதி​தாக தேர்​வுசெய்​யப்​பட்ட 2,715 ஆசிரியர்​களுக்​கான நுழைவுநிலை பயிற்​சியை முதல்​வர் தொடங்​கி​வைத்​தார். தொடர்ந்து ரூ.122 கோடி மதிப்​பீட்​டில் புதி​தாக கட்​டப்​பட்ட 76 அரசு பள்​ளிக்​கட்​டிடங்​களை திறந்​து​வைத்த அவர், ரூ.310 கோடி​யில் 262 அரசு பள்​ளி​களுக்கு புதிய கட்​டிடங்​கள் கட்​டு​வதற்​கும், பாரத சாரண-​சா​ரணி​யர் தலைமை அலு​வலக கட்​டிடத்​துக்​கும் அடிக்​கல் நாட்​டி​னார்.

பின்​னர் அவர் பேசி​ய​தாவது: ஆசிரியர் என்​பவர் பாடப்​புத்​தகத்​தில் இருந்து மட்​டுமல்​லாமல் தன்​னுடைய கல்​வியை​யும், அனுபவத்​தை​யும் மாணவர்​களுக்கு சொல்​லிக் கொடுத்​து, எதிர்​காலத்​தில் நல்​லொழுக்​கம்​மிக்க சமு​தா​யத்தை உரு​வாக்​கு​கிறவர்​கள். இன்​றைய தினம் அறி​வியல், வரலாறு, கணிதம் என எந்​தப் பாட​மாக இருந்​தா​லும், அதன் ஆழத்​தை, மிக​வும் எளி​தாக கற்​றுக் கொள்​வதற்​கான வாய்ப்​பு​கள் உரு​வாகி​விட்​டன. இத்​தகவல்​களை மாணவர்​களின் அறி​வாற்​றலுக்​குக் கொண்டு சென்று அவர்​களு​டைய சிந்​தனையைத் தூண்​டி, அறிவை மேம்​படுத்த வேண்​டிய பெரும் பணி ஆசிரியர்​களுக்கு இருக்​கிறது.

ஏனென்​றால், எந்த அளவுக்கு அறி​வார்ந்த தகவல்​கள் கொட்​டிக்​கிடக்​கிறதோ, அதற்கு கொஞ்​ச​மும் குறைவு இல்​லாமல் தேவையற்ற குப்​பை​யும் இருக்​கின்​றன. நாம்​தான் குழந்​தைகளுக்கு சரி​யானதை அடை​யாளம் காட்​ட​வேண்​டும். எதற்​கெடுத்​தா​லும் தொழில்​நுட்​பத்தை மட்​டுமே நம்பி இருக்​கின்ற தலை​முறை​யாக மாணவர்​கள் மாறி​விடக் கூடாது.

தொழில்​நுட்​பத்​துக்​கும், மனிதச் சிந்​தனைக்​கு​மான வேறு​பாட்டை உணர்த்த வேண்​டும். அறத்​தின் வலிமை​யை​யும், நேர்​மை​யின் தேவையை​யும் மாணவர்​களுக்கு கற்​றுக் கொடுக்க வேண்​டும். பாடப் புத்​தகங்​களைக் கடந்​து, இலக்​கி​யங்​களை, பொது அறி​வுத்தகவல்​களை, சமூக ஒழுக்​கத்​தை, சுற்​றுச்​சூழல் விழிப்​புணர்​வை, காலநிலை மாற்​றம் குறித்த தெளிவை, மாற்று எரிசக்​தி​களின் தேவையைப் பற்​றியெல்​லாம் புரிய வைக்க வேண்​டும். மாணவர்​களிடம் நீங்​கள் ஒரு நண்​ப​னாக பழக வேண்​டும்.

குழந்​தைகள் யாரிட​மும் பேசாமல் அமை​தி​யாக இருப்​பார்​கள். சிலர் கலகல​வென்று பேசு​வார்​கள். சிலர் படித்த குடும்​பங்​களில் இருந்து வந்​திருப்​பார்​கள். சிலருடைய குடும்​பங்​கள் இப்​போது​தான் கல்வி கற்க தொடங்​கி​யிருப்​பார்​கள். அனை​வருடைய வீட்​டிலும் ஒரே சூழல் இருக்க வேண்​டும் என்ற அவசி​யம் இல்​லை. அதனால், அனை​வரை​யும் ஒரே அளவு​கோலோடு, முன்​முடிவோடு அணுகக்​கூ​டாது. அவர்​களின் குடும்​பச்​சூழல் என்ன, அவர்​கள் சமூகத்​தில் எதிர்​கொள்​கின்ற பிரச்​சினை என்​னவென்று கவனித்​து, அவர்​களை வளர்த்​தெடுக்க வேண்​டியது உங்​களு​டைய பொறுப்​பு. ஏனென்​றால், நீங்​கள் தான் குழந்​தைகளின் இரண்​டாவது பெற்​றோர்.

கல்வி தொடர்​பாக செய்​யும் பணி​களைத் தாண்​டி, மாணவர்​களுக்​குள்ளே சாதிய உணர்​வு, பாலின பாகு​பாடு போன்ற பிற்​போக்​குத்​தனங்​கள் தலை​யெடுக்​காமல் ஆசிரியர்​கள் பார்த்​துக் கொள்ள வேண்​டும். மாணவர்​களுக்கு சமத்​து​வம், சமூகநீ​தி​யின் தேவையைப் பற்றி எடுத்​துச் சொல்​லுங்​கள். மாணவர்​களிடம் அடிக்​கடி மனது​விட்டு பேசுங்​கள். நூல​கங்​களை​யும், வாசிப்​புப் பழக்​கத்​தை​யும் அறி​முகப்​படுத்​துங்​கள். அதற்​கு, ஆசிரியர்​கள் முதலில் படித்​துக் கொண்டே இருக்க வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

முன்​ன​தாக பள்​ளிக்​கல்வி அமைச்​சர் அன்​பில் மகேஸ் வரவேற்​றுப் பேசும்​போது, “அரசு பள்​ளி​களில் 8,380 ஆசிரியர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். விரை​வில் பட்​ட​தாரி ஆசிரியர்​கள், முதுகலை ஆசிரியர்​கள், வட்​டார கல்வி அலு​வலர்​கள் என 3,227 பேர் தேர்வு செய்​யப்பட உள்ளனர்” என்​றார்.

இவ்​விழா​வில், துணை முதல்​வர் உதயநிதி, அமைச்சர்​கள் கே.என்​.நேரு, மா.சுப்​பிரமணி​யன், சி.​வி.கணேசன், நாசர், ஆசிரியர்
தேர்வு வாரிய தலைவர் எஸ்​.ஜெயந்​தி, ஒருங்​கிணைந்த பள்​ளிக்​கல்வி திட்ட இயக்​குநர் மா.ஆர்த்​தி, பள்​ளிக்​கல்வி இயக்​குநர் எஸ்​.கண்​ணப்​பன், தொடக்​கக்​கல்வி இயக்​குநர் பி.ஏ.நரேஷ் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர். நிறை​வாக, பள்​ளிக்​கல்​வித்​ துறை​யின்​ செயலர்​ பி.சந்​திரமோகன்​ நன்​றி கூறி​னார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in