பல்வேறு நவீன வசதிகளுடன் ரூ.12 கோடியில் நாகேஸ்வரராவ் பூங்கா மேம்பாட்டு பணி: அமைச்சர் நேரு தொடங்கிவைத்தார்

பல்வேறு நவீன வசதிகளுடன் ரூ.12 கோடியில் நாகேஸ்வரராவ் பூங்கா மேம்பாட்டு பணி: அமைச்சர் நேரு தொடங்கிவைத்தார்
Updated on
1 min read

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.12 கோடியில் மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா மேம்பாட்டு பணிகளை அமைச்சர் கே.என்.நேரு நேற்று தொடங்கி வைத்தார். மாநகராட்சி சார்பில் மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் நாகேஸ் வரராவ் பூங்கா பாரமரிக்கப்பட்டு வருகிறது. இப்பூங்காவில் ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் ரூ.12.22 கோடியில் மேம்பாட்டு பணி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

4 ஏக்கர் பரப்பளவு: இப்பூங்கா 1949-ம் ஆண்டு அக்.20-ம் தேதி அப்போதைய மதராஸ் மாகாணத்தின் முதல்வர் பி.எஸ்.குமாரசாமி ராஜாவால் திறக்கப்பட்டது. அப்பகுதியில் வசித்த சுதந்திரப் போராட்ட வீரரான நாகேஸ்வர ராவ் பெயரால் இப்பூங்கா அழைக்கப்படுகிறது. சென்னை நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க பசுமை வளம் நிறைந்த இந்த பூங்காவின் மொத்த பரப்பளவு சுமார் 4 ஏக்கர் ஆகும்.

பசுமை நிறைந்த மற்றும் நிலைத்தன்மை கொண்ட, அழகிய வடிவமைப்புடன் பாரம்பரிய அழகை பேணும்படியாக பூங்கா மேம்படுத்தப்பட உள்ளது. இந்த மேம்பாட்டுப் பணிகளில் அழகிய வடிவமைப்புடன் கூடிய நுழைவு வளாகம், கலந்துரையாடும் இடம், பூப்பந்து மைதானம், குழந்தைகள் விளையாடும் பகுதி, குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள், நீரூற்றுடன் கூடிய இருக்கைகள், மரங்களைச் சுற்றிலும் அமரும் இடம், டென்சைல் கூரையுடன் கூடிய அமரும் இடம் அமைக்கப்பட உள்ளன.

மேலும், நீர்நிலை கட்டமைப்பு, ரிப்பன் வடிவில் அமரும் இடம், பசுமைப் பரப்பு, செயற்கை நீரூற்று, குடிநீர் மற்றும் மின்வசதி, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், சுற்றுச்சுவர் அமைத்தல், பெவிலியன் கூரைஅமைப்பு, அறிவிப்புப் பலகைகள், ஒலி அமைப்பு ஒப்பனை அறை மற்றும் பாதுகாவலர் அறை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்நிகழ்ச்சியில், மேயர் ஆர்.பிரியா, தென்சென்னை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், மயிலாப்பூர் எம்எல்ஏ த.வேலு, துணை மேயர் மு.மகேஷ் குமார், ஆணையர் ஜெ.குமர குருபரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in