Published : 24 Aug 2018 11:22 AM
Last Updated : 24 Aug 2018 11:22 AM

பெண் எஸ்.பி புகார் குறித்து விசாகா கமிட்டியில் விசாரணை: ஏடிஜிபி சீமா அகர்வால் தலைமையில் நடந்தது

புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட  பிறகு, காவல் துறை விசாகா கமிட்டியின் முதல் கூட்டம், கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் நடந்தது.

பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க, நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்திலும் ‘விசாகா கமிட்டி’ அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது கடந்த 2013-ல் சட்டமாக்கப்பட்டது.

அதன்படி, 10 ஊழியர்களுக்கு மேல் பணிபுரியும் அனைத்துநிறுவனங்கள், அலுவலகங்களிலும் விசாகா கமிட்டி அமைக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி ஆண்டுதோறும் அதன் செயல்பாடுகளை அறிக்கையாக தயாரித்து அரசிடம் வழங்க வேண்டும். விசாகா கமிட்டி அமைக்காத நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.

இந்த நிலையில், தமிழககாவல் துறையில் அமைக்கப்பட்ட ‘விசாகா கமிட்டி’ உறுப்பினர்கள் ஓய்வுபெற்ற பிறகும், புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், அந்த கமிட்டிசெயலற்று இருந்தது. ‘தமிழக காவல் துறையிலேயே விசாகா கமிட்டி இல்லையா?’ என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி எம்.பி., தனது ட்விட்டர் பக்கத்தில் சில நாட்களுக்கு முன்பு கேள்வி எழுப்பியிருந்தார்.

உடனடியாக டிஜிபி டி.கே. ராஜேந்திரன் உத்தரவின்பேரில் காவல் துறையில் மீண்டும் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டது.

இதன் தலைவராக கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் மற்றும் உறுப்பினர்களாக கூடுதல் டிஜிபி அருணாச்சலம், டிஐஜி தேன்மொழி, ஓய்வுபெற்ற கூடுதல் எஸ்பி சரஸ்வதி, டிஜிபி அலுவலக முதுநிலை நிர்வாக அலுவலர் ரமேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

புதிய உறுப்பினர்களைக் கொண்ட விசாகா கமிட்டியின் முதல் கூட்டம் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள மாநில குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.

இதில் கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். ஊழல் தடுப்புமற்றும் கண்காணிப்பு துறை ஐஜி ஒருவர் மீது அதே துறையைச் சேர்ந்த பெண் எஸ்.பி. கொடுத்த புகார் குறித்து இக்கூட்டத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x