தவெக தலைவர் விஜய் வீட்டின் மொட்டை மாடியில் பதுங்கியிருந்த இளைஞர் யார்; நடந்தது என்ன?

தவெக தலைவர் விஜய் வீட்டின் மொட்டை மாடியில் பதுங்கியிருந்த இளைஞர் யார்; நடந்தது என்ன?
Updated on
1 min read

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வீட்டில் இளைஞர் ஒருவர் நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளிகள் அந்த இளைஞரை பிடித்து நீலாங்கரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை - நீலாங்கரை கேசினோ டிரைவ் பகுதியில் நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் வீடு அமைந்துள்ளது. அவரது வீட்டுக்கு எப்போதும் பாதுகாப்பு பணியில் காவல் துறையினர், தனியார் பாதுகாவலர்கள் மற்றும் ‘ஒய்’ செக்யூரிட்டி பிரிவினரும் ஈடுபவது வழக்கம். இந்த நிலையில் பலத்த பாதுகாப்பையும் மீறி இளைஞர் ஒருவர் அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.

விஜய்யின் வீட்டு வளாகத்தில் நுழைந்த அந்த இளைஞர், மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் அமர்ந்திருந்ததை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்கள் கவனித்துள்ளனர். பின்னர் அவரை பிடித்து நீலாங்கரை போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பிடிபட்ட அந்த இளைஞரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் மதுராந்தகத்தை சேர்ந்த அருண் (24) என்பதும், நான்கு ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதும், வேளச்சேரியில் சித்தி வீட்டில் வசிப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் நீலாங்கரை போலீஸார் சேர்த்தனர். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பலத்த பாதுகாப்பை மீறி அந்த இளைஞர் விஜய் வீட்டுக்குள் நுழைந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in