

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என சிஐடியு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் விடுத்த அறிக்கை: தமிழக அரசின் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் பணபலன்களை வழங்க கோரியும் கடந்த 30 நாட்களாக தமிழகத்தின் அனைத்து பணிமனைகள் முன்பும் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். பிற துறைகளுக்கு நிதி ஒதுக்குவதுபோல் போக்குவரத்து துறைக்கும் அரசு நிதி ஒதுக்க வேண்டும்.
வரும் காலம் பண்டிகை காலம் என்பதை மனதில் கொண்டு தமிழக அரசு மற்றும் போக்குவரத்து கழகம் சுமுக தீர்வு காண வேண்டும். பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வண்ணம் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.