டெல்லியில் குடியரசு துணைத் தலைவரை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி!

டெல்லியில் குடியரசு துணைத் தலைவரை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி!
Updated on
1 min read

புதுடெல்லி: புதிதாக பொறுப்பேற்றுள்ள குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் இன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

குடியரசு துணைத் தலைவராக தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் சமீபத்தில் பொறுப்பேற்றார். இந்த நிலையில், டெல்லியில் உள்ள குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் சி.பி.ராதாகிருஷ்ணனை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் அதிமுக எம்.பிக்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம், இன்பதுரை, தனபால் ஆகியோர் உடனிருந்தனர்.

இதனையடுத்து, இன்று இரவு 8 மணிக்கு எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததால், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், சில நாட்களுக்கு முன்பு அமித் ஷாவை சந்தித்திருந்தார்.

அதேபோல எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகினர். இந்தச் சூழலில், இன்று நடைபெறவுள்ள இபிஎஸ் - அமித் ஷா சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in