புதுச்சேரி தனியார் வங்கியில் தீ விபத்து: பொருட்கள் சேதம்

புதுச்சேரி தனியார் வங்கியில் தீ விபத்து: பொருட்கள் சேதம்
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரி நகர பகுதியில் உள்ள தனியார் வங்கியில் அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பணம் எண்ணும் இயந்திரம், டேபிள்-சேர், ஏசி மெஷின் எரிந்து சாம்பலானது.

புதுவை நகரின் மையப் பகுதியான புஸ்சி வீதி - எல்லையம்மன் கோவில் வீதி சந்திப்பில் சிட்டி யூனியன் வங்கி உள்ளது. இந்த வங்கியை வழக்கம் போல் பணி முடிந்து ஊழியர்கள் நேற்று பூட்டி சென்றனர். இந்த நிலையில் இன்று அதிகாலை வங்கியின் உள்ளே இருந்து புகை வந்தது. இதனை பார்த்த வங்கி நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த இரவு காவலாளி உடனடியாக 100க்கு போன் செய்து தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து அருகில் உள்ள ஒதியன்சாலை போலீஸ் நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் போலீஸார் வந்து வங்கி கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

இதனிடையே தகவல் அறிந்த தீயணைப்பு துறையினரும் அங்கு வந்து விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். விபத்தில் கேஸ் கவுண்டரில் இருந்த பணம் எண்ணும் எந்திரம், ஏசி மெஷின், டேபிள்-சேர் போன்றவை முழுமையாக எரிந்தன.

மேலும் அவற்றின் மீது வைக்கப்பட்ட ஆவணங்களும் தீக்கிரையாகின.ஒரு மணி நேரத்தில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. அதே நேரத்தில் வங்கியில் பணம் வைக்கும் அறைக்கு தீ பரவாமல் அணைத்ததால் லட்சக்கணக்கில் ரூபாய் நோட்டுகள் தப்பின.

இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். முதல் கட்ட விசாரணையில் கவுண்டரில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in