அண்ணாமலை காலாவதி ஆனவர் அல்ல: தமிழக பாஜக

அண்ணாமலை காலாவதி ஆனவர் அல்ல: தமிழக பாஜக
Updated on
1 min read

சென்னை: அண்ணாமலை காலாவதியானவர் அல்ல, அண்ணாமலையின் அரசியல் எதிர்காலத்தை காலம் உறுதி செய்யும் என்று தமிழக பாஜக தெரிவித்துள்ளது.

இது குறித்து பாஜக மாநில தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுகவை கடும் நெருக்கடிக்கும், சிக்கலுக்கும் உள்ளாக்கியவர் முன்னாள் தலைவர் அண்ணாமலை. தனிமனித விமர்சனத்தை தவிர்ப்பது உயர் கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியனுக்கு நல்லது. கள்ளத்தனம் குறித்து பேசுவதற்கு உங்களுக்கு அருகதையுள்ளதா ?

உங்களை பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்தால் அத்தனை வண்டவாளங்களும் வெளிச்சத்துக்கு வந்து விடும் என்று உங்களுக்கு தெரியாதது வியப்பளிக்கிறது. அண்ணாமலையால் திமுகவினர் தூக்கமின்றி தவித்ததும், தவித்துக் கொண்டிருப்பதும் உலகறிந்த உண்மை. பாஜகவில் குடும்ப அரசியலோ, வாரிசு அரசியலோ இல்லை என்பது கூட தெரியாத ஓர் அமைச்சர் இப்படி விமர்சித்திருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.

திமுகவில் சொல்லப்படும் பதவி, பாஜகவில் பொறுப்பு, அது மாறிக் கொண்டேயிருக்கும் என்பதை அறியுங்கள். அண்ணாமலை காலாவதியானவர் அல்ல, அண்ணாமலையின் அரசியல் எதிர்காலத்தை காலம் உறுதி செய்யும். அப்போது நீங்கள் காலாவதியாகியிருப்பீர்கள் என்பதை உணருங்கள். மாற்றம் ஒன்றே மாறாதது” என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தமிழகத்துக்கு பின்னடையவை தேடி தந்தவர் என்றும், அவர் காலாவதியான அரசியல் தலைவராகி விட்டார் என்றும் அமைச்சர் கோ.வி.செழியன் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in