திருவாரூர்: ஆற்றில் சிக்கி தத்தளித்த 2 சிறுவர்களை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய பெண்!

மாங்கனி
மாங்கனி
Updated on
1 min read

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருநாட்டியாத்தங்குடி பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மனைவி மாங்கனி(39). இவர், தனது வீட்டுக்கு எதிரில் உள்ள வெள்ளையாற்று தடுப்பணை பகுதியில் செப்.9-ம் தேதி குளிக்கச் சென்றார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன்- சத்தியகலா தம்பதியரின் மகன் ஹேம்சரண்(10), பெரும்புகலூர் பகுதியைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் கவியரசன்(11) ஆகியோரும் அங்கு குளிக்க வந்துள்ளனர்.

இந்நிலையில், ஆற்றின் கீழ் படிக்கட்டில் அமர்ந்து குளித்துக்கொண்டிருந்த கவியரசன் திடீரென கால் வழுக்கி ஆற்றுக்குள் விழுந்தார். அப்போது, அருகில் இருந்த ஹேம் சரணின் கையைப் பிடித்து இழுத்த நிலையில், அவரும் ஆற்றுக்குள் விழுந்தார். இதையடுத்து, சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்ட மாங்கனி, உடனடியாக ஆற்றில் குதித்து, தத்தளித்துக்கொண்டிருந்த சிறுவர்களை காப்பாற்ற முயற்சித்தார்.

அப்போது, ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால், இருவரையும் அவரால் கரைக்கு கொண்டுவர முடியவில்லை. ஆனாலும், மாங்கனி தன் உயிரை பணயம் வைத்து, இருவரையும் மேட்டுப்பகுதிக்கு இழுத்து வந்து கூச்சலிட்டார். இதைக்கண்டு, அவ்வழியாக சென்றுகொண்டிருந்த சிலர் ஓடிவந்து, அவர்களை மீட்டு, கரைக்கு கொண்டுவந்தனர். இதில், ஆற்றுநீரை குடித்து பாதிக்கப்பட்டிருந்த கவியரசன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது நலமுடன் உள்ளார்.

இதையடுத்து மாங்கனிக்கு பாராட்டுகள் குவிகின்றன. இதையறிந்த, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தனது ‘எக்ஸ்’ பக்கத்தில், மாங்கனிக்கு வாழ்த்து தெரிவித்து, “பிறருக்கொரு துயரெனில் முன்னின்று காப்பது தமிழர்களின் இயல்பு, பண்பு. அப்பண்பின் தைரியமிகு இலக்கணமாய் திகழும் சகோதரி மாங்கனிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்” என பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in