சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்து உறுப்பு தானம் செய்தோர் பெயர்​ பதியப்பட்ட மதிப்புச்சுவர் செப்​.30-ல் திறப்பு

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்து உறுப்பு தானம் செய்தோர் பெயர்​ பதியப்பட்ட மதிப்புச்சுவர் செப்​.30-ல் திறப்பு
Updated on
2 min read

சென்னை: சென்னை ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை​யில் மூளைச்​சாவு அடைந்து உடலுறுப்பு தானம் செய்​தவர்​களின் பெயர்​கள் பதி​யப்​பட்ட ‘மதிப்​புச்​சுவர்’ வரும் 30-ம் தேதி திறக்​கப்​படு​கிறது. சென்னை சைதாப்​பேட்டை சட்​டப்​பேரவை தொகு​தி, கோடம்​பாக்​கம் மண்​டலம், வார்டு 139, மேற்கு ஜோன்ஸ் சாலை​யில் உள்ள மயானத்​தின் மேம்​பாட்​டுப் பணி​களை சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் நேற்று தொடங்கி வைத்​தார்.

அப்​போது அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: சென்னை மாநக​ராட்​சி​யில் உள்ள அனைத்து மயானக் கூடங்​கள், குறிப்​பாக எரி​வாயு தகன மேடைகளை சீர்​படுத்தி மேம்​படுத்​தும் பணி​கள் தொடர்ந்து நடை​பெற்று வருகின்றன.

மேற்கு சைதாப்​பேட்​டை​யில் உள்ள 2 எரி​வாயு தகன மேடைகள் ஏற்​கெனவே புதி​தாகக் கட்​டப்​பட்டு பயன்​பாட்​டில் உள்​ளன. இந்த மயானத்​தில் மாதம் 100 பேரின் உடல்​கள் அடக்​கம், தகனம் செய்​யப்​படு​கின்​றன. இந்த மயானம் பசுமைப் பகு​தி​யாகவே இன்றைக்கு இருந்து வரு​கிறது. அனைத்து மத அடக்க இடங்​களி​லும் பசுமைப் பரப்பை அதி​கரித்​து, ஒவ்​வொரு மயான​மும் பூங்காக்​களுக்கு இணை​யாக மாற்ற நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது.

அதன்​படி, சைதாப்​பேட்​டை​யில் உள்ள இந்த மயானத்தை ரூ.94.83 லட்​சத்​தில் மேம்​படுத்​தும் பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டு, மயானத்​தைச் சுற்றி சிமென்ட் கான்​கிரிட் சாலைகள், இன்​டர்​லாக்​கிங் லாண்ட்​ஸ்​கேப்​பிங் பணி​கள், குளியல் அறை மற்​றும் கழிப்பறை கட்​டு​வது, சுற்​றுச் சுவரை உயர்த்​திக் கட்​டும் பணி​கள் மேற்​கொள்​ளப்​பட​வுள்​ளன.

கோவை அரசு மருத்​து​வ​மனை​யில் மருத்​து​வப் பயனாளிக்​கு, வீல் சேரை எடுத்து வர பணி​யாளர் சென்​றிருந்த நேரத்​தில் தனது தந்தையை ஆதங்​கத்​தின் காரண​மாக மகன் தூக்​கிக் கொண்டு சென்​றுள்​ளார். அதனை உடனே அரு​கில் இருப்​பவர்​கள் வீடியோ எடுத்து வெளி​யிட்​டிருக்​கிறார்​கள்.

அது குறித்து தெளி​வாக சம்​பந்​தப்​பட்ட டீன் விளக்​கம் கொடுத்​திருக்​கிறார். தின​மும் 4,000 பேருக்கு சிகிச்சை வழங்​கும் மருத்​து​வ மனை​யில் சக்கர நாற்​காலி கூடவா இல்​லாமல் இருக்​கும்? மூளைச்​சாவு அடைந்​து, உடலுறுப்பு தானம் வழங்​கிய​வர்​களுக்கு அரசு மரி​யாதை செலுத்​தப்​படும் என்று கடந்த 2024-ம் ஆண்டு செப். 23-ம் தேதி முதல்​வர் அறி​வித்​தார்.

இது​வரை 513 கொடை​யாளர்​களிட​மிருந்து உடலுறுப்பு தானம் பெறப்​பட்​டுள்​ளது. மேலும் அவர்​களை சிறப்​பிக்​கும் வகை​யில் முதல்​வரின் வழி​காட்​டு​தலின்​படி, சென்னை ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை​யில் வரும் 30-ம் தேதி ‘wall of honor - மதிப்​புச்​சுவர்’ திறந்து வைக்​கப்​பட​வுள்​ளது. இது​வரை மூளைச்​சாவு அடைந்து உடலுறுப்பு தானம் செய்​தவர்​களின் பெயர்​களை அதில் உள்ள கல்​வெட்​டில் பதிக்​கும் பணி நிறைவடை​யும் நிலை​யில் உள்​ளது.

அமெரிக்கா - வியட்​நாம் இடையே நடந்த போரில் உயிர்​நீத்​தவர்​களின் பெயர்​களை அமெரிக்​கா​வின் வாஷிங்​டன் நகரில் சுவரில் கல்​வெட்​டாக வைத்​திருக்​கிறார்​கள். அதை மாதிரி​யாகக் கொண்டு நமது மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​களில் மதிப்​புச்​சுவர் கட்​டும் பணி நடை​பெற்​றுக் கொண்​டிருக்​கிறது.

சென்னை ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனையை தொடர்ந்து தமிழகத்​தி​லுள்ள ஒட்​டுமொத்த அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​களி​லும் மதிப்​புச்​சுவர் அமைக்​கப்​பட​வுள்​ளது. ஒவ்​வொரு மாவட்​டத்​தி​லும் உடலுறுப்பு தானம் செய்​தவர்​களின் பெயர்​கள் அந்​தந்த மருத்​து​வ​மனை​களில் உள்​ள சுவர்​களில்​ நிலைத்​திருக்​கும்​. இவ்​வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in