பழனிசாமியிடம் முறையீடு: திமுக ஆட்சி மீது திண்டுக்கல் வர்த்தகர்கள் அதிருப்தி ஏன்?

படம்:நா.தங்கரத்தினம்
படம்:நா.தங்கரத்தினம்
Updated on
2 min read

திண்டுக்கல் மாவட்டத்தில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியிடம், திமுக ஆட்சி மீதான அதிருப்தியை வர்த்தகர்கள், விவசாயிகள் வெளிப்படுத்தினர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வேடசந்தூரை தவிர்த்து, மற்ற 6 தொகுதிகளான நத்தம், திண்டுக்கல், நிலக்கோட்டை, ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழநியில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி பிரச்சாரப் பயணம் மேற்கொண்டார்.

அனைத்து இடங்களிலும் கூடிய கூட்டத்தை பார்த்து மகிழ்சியடைந்தாலும், அதைவிட அவருக்கு மகிழ்ச்சியளித்தது திண்டுக்கல்லில் நடந்த வர்த்தகர்கள், விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் தான் என்று அக்கட்சியினர் தெரிவித்தனர். காரணம், கலந்துரைடலில் ஆளுங்கட்சியின் மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களை வர்த்தகர்கள், விவசாயிகள், பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்கள் அடுக்கியது தான்.

அதிமுக ஆட்சியில் சொத்து வரி உயர்வை நிறுத்தி வைத்தீர்கள், தற்போது சொத்து வரியை சொத்தை விற்றுத்தான் கட்ட வேண்டிய நிலையில் உள்ளோம். மின் கட்ணம் அதிகரிப்பால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. செஸ் வரியை நீக்க வேண்டும். தொழில் உரிமக் கட்டணம் அதிமுக ஆட்சியில் குறைவாக இருந்தது. தற்போது கட்ட முடியாத அளவுக்கு கட்டணங்களை உயர்த்திவிட்டனர் என தங்கள் வேதனையை வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

விவசாயிகள் சங்கம் சார்பில் பேசியவர்கள், அதிமுக ஆட்சியில் இந்த அளவுக்கு போதைப் பொருள் புழக்கம் இல்லை. வரி உயர்வும் இல்லை. கால்நடை ஆராய்ச்சி மையத்தை உங்கள் ஆட்சியில் கொண்டு வந்தீர்கள். அதை திமுக அரசு சரியாக நிர்வகிக்கவில்லை. உங்கள் ஆட்சியில் குளங்களில் இலவசமாக மண் அள்ளிய விவசாயிகள், தற்போது ஒரு லோடுக்கு ஆயிரம் ரூபாய் செலவு செய்கின்றனர் என்று தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

கிறிஸ்தவ அமைப்புகள் சார்பில் பேசியோர், அதிமுக தான் கிறிஸ்தவர்களுக்கு அதிக நன்மைகளை செய்துள்ளது. வன்னிய கிறிஸ்தவர்களை எம்பிசி பட்டியலில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ஹோட்டல் உரிமையாளர் சங்கம் சார்பில் பேசியவர்கள், ‘ரவுடிகள் தொல்லை, அடிதடி பிரச்சினை உள்ளது. சட்டம் - ஒழுங்கு சரியில்லாததால் தொழிலை நடத்துவதில் சிரமத்தை சந்தித்து வருகிறோம்’ என திமுக ஆட்சி மீது நேரடியாக குற்றம்சாட்டினர்.

பின்னர், பல்வேறு சங்கத்தினரும் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர். அதைப் பெற்றுக் கொண்ட பழனிசாமி, அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் உங்கள் அனைவரின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து நடந்த பிரச்சாரப் பயணக் கூட்டங்களில் திமுக அரசை கடுமையாக விமர்சித்து பழனிசாமி பேசினார்.

இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: அடுத்த ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், திமுக ஆட்சியின் குறைகளை மக்களிடையே தெரிவிக்க தமிழகம் முழுவதும் பிரச்சாரப் பயணத்தை பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். வர்த்தகர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இதில் திமுக அரசு மீது பலர் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதனால் ஆட்சி மாற்றம் உறுதி என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இதே உற்சாகத்துடன் தேர்தல் களப்பணியை ஆற்றுமாறு நிர்வாகிகளுக்கு பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் என்று கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in