Published : 11 Sep 2025 05:52 AM
Last Updated : 11 Sep 2025 05:52 AM
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், எங்களது கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றவில்லை என ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் குற்றம் சாட்டி உள்ளது. குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், சென்னையில் நேற்று நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் கே.பழனிசாமி தலைமை வகித்தார். இதில், 200-க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் பங்கேற்றனர்.
போராட்டம் தொடர்பாக, சங்கத்தின் மாநில பொருளாளர் என். ஜெயச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் போது, சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களை அரசு பணியாளர்களாக்கி காலமுறை ஊதியம் வழங்கப்படும். அவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமும், பணிக்கொடையும் வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டு கடந்துவிட்ட நிலையிலும், எங்களது கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றவில்லை. இதனால், இதுவரை எங்களுக்கு ரூ.2 ஆயிரம் மட்டுமே ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில், 2021-ல் நடைபெற்ற மாநில மாநாடு, அதைத் தொடர்ந்து, 2022-ல் நடந்த ஜாக்டோ - ஜியோ மாநில மாநாடு ஆகியவற்றுக்கு வருகை தந்த தமிழக முதல்வர், தமிழக அரசின் நிதி நிலைமை சரியான பின்னர் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என உரையாற்றினார். ஆனால், அந்த உரை வெறும் வீர உரையாகவே இருக்கிறதே தவிர, இதுவரை செயல்வடிவம் பெறவில்லை.
எனவே, 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு, குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்க வேண்டும். விலைவாசி உயர்வை ஈடு செய்ய அகவிலைப்படி வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம், பண்டிகை முன்பணம், மருத்துவபடி, மருத்துவக் காப்பீடு, குடும்பநல நிதி போன்றவற்றை வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT