திருட்டு வழக்கில் கைதான ஊராட்சி மன்ற தலைவர் பாரதியை கட்சியில் இருந்து நீக்கி திமுக நடவடிக்கை!

கைது செய்யப்பட்ட பாரதி | கோப்புப் படம்
கைது செய்யப்பட்ட பாரதி | கோப்புப் படம்
Updated on
1 min read

ஆம்பூர்: ஓடும் பேருந்தில் தங்க நகையை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக பெண் ஊராட்சி மன்ற தலைவர் பாரதியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், காசோலையில் கையெழுத்திடும் அதிகாரமும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை கோயம்பேடு நோக்கி வந்த அரசு பேருந்தில் சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த வரலட்சுமி (50) என்பவர் பயணம் செய்துள்ளார். அப்போது, அவரின் 5 பவுன் தங்க நகை மாயமானதாக கோயம்பேடு போலீஸில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில் வரலட்சுமியுடன் அதே பேருந்தில் பயணம் செய்த வேலூர் மாவட்டம் திமுக நரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பாரதி (56) என்பவர் நகை திருட்டில் ஈடுபட்டதை கண்டறிந்து, அவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட திமுக நிர்வாகி பாரதி மீது ஏற்கெனவே பல்வேறு காவல் நிலையங்களில் 10 திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தொடர் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சார சுற்றுப்பயணத்தில் இதனை சுட்டிக் காட்டி திமுகவை கடுமையாக விமர்சித்து வந்தார்.

இந்த நிலையில், திமுக கட்சி தலைமை அவர் மீது ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொண்டது. இது குறித்து, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்ததால் நரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பாரதியை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்து (டிஸ்மிஸ்) உத்தரவிடப்படுவதாகவும், அவருடன் திமுகவினர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனவும் தெரிவித்திருந்தார். இதனிடையே, நரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பாரதி காசோலையில் கையெழுத்திடும் அதிகாரமும் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in