

சென்னை: கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் எனப் போற்றப்படும் சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரின் 154-வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த வஉசி படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதேபோல், தமிழக அரசின் செய்தித் துறை சார்பில் கிண்டி காந்தி மண்டபம் வளாகத்தில் உள்ள வஉசி சிலைக்கு அருகே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டியில் வஉசியின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள வஉசி சிலைக்கு கீழ் வைக்கப்பட்ட அவரது உருவப் படத்துக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். துறைமுக நுழைவு வாயிலில் உள்ள வஉசி சிலைக்கு பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சென்னை துறைமுகத்தில் வஉசியின் படத்துக்கு துறைமுகத்தலைவர் சுனில் பாலிவால், தலைமை கண்காணிப்பு அலுவலர் எஸ்.முரளிகிருஷ்ணன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “உண்மையான சுதேசி உணர்வோடு, செக்கிழுத்துச் செங்குருதி சிந்தி, தியாக வாழ்வுக்கோர் எடுத்துக்காட்டாக - நாட்டுப்பற்றுக்கு இலக்கணமாக நம் நெஞ்சங்களில் வாழும் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் பெருவாழ்வை, அவரது 154-வது பிறந்தநாளில் நினைவுகூர்ந்து போற்றுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.