

சென்னை: லண்டன் சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இங்கிலாந்து அமைச்சர் கேத்தரின் வெஸ்ட்டை சந்தித்து, வர்த்தகத் துறையில் அந்நாட்டின் பங்களிப்பை அதிகரிக்க கோரிக்கை விடுத்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ‘டிஎன் ரைசிங்’ ஐரோப்பிய பயணத்தின் 2-ம் கட்டத்தில், இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள வெளியுறவு, காமன் வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தில், இங்கிலாந்து அமைச்சர், நாடாளுமன்ற துணை செயலாளர் (இந்தோ-பசிபிக்) கேத்தரின் வெஸ்ட்டை சந்தித்து, பல்வேறு துறைகளில் தமிழகம் -இங்கிலாந்து ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்தார்.
இந்தச் சந்திப்பின்போது, இந்தோ-பசிபிக் பகுதிகளில் பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல், பசுமைப் பொருளாதாரத் தலைமை, கல்வி, ஆராய்ச்சி மற்றும் மீள்தன்மை கொண்ட கடல்சார் இணைப்பு போன்ற துறைகளில் தமிழகத்தின் பங்கையும், மின்சார இயக்கம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஐடி சேவைகள் மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் தமிழகத்தின் வலிமையையும் எடுத்துரைத்தார். மேலும், வர்த்தகம் மற்றும் முதலீட்டு கூட்டாண்மை மூலம் இந்தத் துறைகளில் அதிக அளவிலான இங்கிலாந்து நாட்டின் பங்களிப்பையும் கோரினார்.
உயர் கல்வி, திறன் மேம்பாடு மற்றும் காலநிலை ஒத்துழைப்பில் இங்கிலாந்து-தமிழகம் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. பசுமை ஹைட்ரஜன், சூரிய சக்தி மற்றும் காற்றாலை ஆற்றல் ஆகியவற்றில் உலகளாவிய அளவில் தமிழகம் முன்னணி மாநிலமாக விளங்குவதாக முதல்வர் விளக்கினார்.
மேலும், காலநிலை மாற்ற உத்திகளில் இணைந்து செயல்படுவது குறித்தும் விவாதித்தனர். கலாச்சார மற்றும் புலம்பெயர் தொடர்புகளை விரிவுபடுத்து வதற்கான வாய்ப்புகள் குறித்தும், தமிழகத்தின் கடலோர நிலையைப் பயன்படுத்தி கடல்சார் ஒத்துழைப்பு குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
ஏற்கெனவே விண்வெளி, கடல்சார் நுண்ணறிவு, புதுப்பிக்கத் தக்கவை, ஜவுளி மற்றும் வடிவமைப்பு கல்வி ஆகியவற்றில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ள நிலையில், முதல்வரின் இந்த சந்திப்பு மேலும் வலு சேர்க்கும். இந்த சந்திப்பின்போது, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முதல்வரின் முதன்மை செயலர் உமாநாத், தொழில்துறை செயலர் வி. அருண் ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவன மேலாண்மை இயக்குநர் தாரேஸ் அகமது உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பெரியார் படம் திறப்பு இந்நிலையில், நேற்று இரவு, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத் தில் புலம் பெயர் தமிழ் அமைப்புகள் சார்பிலான நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பெரியார் உருவப்படத்தை திறந்து வைத்தார்.
முன்னதாக, இதுகுறித்து முதல்வர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், ‘‘தமிழர்களுக்கு எனதுஅன்பான வணக்கங்கள். மாலை நடைபெறும் நிகழ்வில் உலகப்புகழ் பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் உருவப்படத்தை திறந்து வைக்க உள்ளேன். அதை திறந்து வைத்து பேசுவதை எண்ணி பெருமைப் படுகிறேன். ஏனெனில் அவர் தமிழர் தலைவர் மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள தன்மானம், சுயமரியா தையை காத்ததலைவராக விளங்குகிறார்’’ என தெரிவித்துள்ளார்.