

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனகாபுத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில், அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளதால் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக ‘தி இந்து - உங்கள் குரல்’பகுதிக்கு அனகாபுத்தூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்.ரமேஷ் பாபு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து, பள்ளிக்கு சென்று விசாரித்தபோது அங்கு பல்வேறு வசதிக்குறைவுகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
பல்லாவரத்திலிருந்து பூந்தமல்லி செல்லும் காமராஜர் சாலையில் அமைந்துள்ள இந்த பள்ளியில், சுமார் 1,500 மாணவ, மாணவியர் படிக்கிறார்கள். ஆனால் இங்கு கழிப்பறை வசதி சரியாக இல்லை. தற்போது இருக்கும் கழிப்பறைகள் சரி வர பராமரிக்கப்படாததால் பயன்
படுத்த முடியாத சூழல் உள்ளதாக, மாணவ, மாணவியர் குற்றஞ்சாட்டுகின்றனர். இதேபோல், மாணவர்களுக்கு சுகாதாரமான குடிநீரும் கிடைப் பதில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இந்தப் பள்ளியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டட பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருக்கிறது.
பரிசோதனைக் கூடங்கள், விளையாட்டுப் பிரிவு போன்றவற்றுக்கு தேவையான உபகரணங்கள் வாங்காமலும், வாங்கிய உபகரணங்களை சரியாக பயன்படுத்தாமலும் இருப்பதாக மாணவர்கள் புகார் கூறினர்.