தமிழகத்தில் நாளை முதல் செப்.6 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நாளை முதல் செப்.6 வரை மழைக்கு வாய்ப்பு

Published on

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் செப்.6-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ”தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நாளை (செப்.1) லேசானது முதல் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சூறாவளி காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். செப்.2 முதல் 6ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் தமிழக கடலோரப் பகுதிகள், வட தமிழக கடல் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, சென்னை மணலியில் 27 செ.மீ மழை, மணலி புது நகரில் 26 செ.மீ மழை, விம்கோ நகரில் 23 செ.மீ மழை, கொரட்டூரில் 16 செ.மீ மழை, எண்ணூர், கத்திவாக்கத்தில் 14 செ.மீ மழை, திருவொற்றியூர், அயப்பாக்கத்தில் 12 செ.மீ மழை, அம்பத்தூர், பாரிமுனை, நெற்குன்றம் ஆகிய இடங்களில் தலா 11 செ.மீ மழை, தண்டையார்பேட்டை, ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி, கொளத்தூர், அயனாவரம் ஆகிய இடங்களில் தலா 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது” என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in