எம்.பி சசிகாந்த் செந்தில் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு

எம்.பி சசிகாந்த் செந்தில் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு
Updated on
1 min read

திருவள்ளூர்: மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்கக்கோரி, உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்த காங். எம்பி சசிகாந்த் செந்தில், மேல் சிகிச்சைக்காக சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மத்திய அரசு, ”சமக்ர சிக் ஷா அபியான்” (எஸ்.எஸ்.ஏ.) என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கக் கோரி, திருவள்ளூர் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் நேற்று முன்தினம் காலை திருவள்ளூரில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு பார்வையாளர் கூட்ட அரங்கில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.

2-வது நாளாக நேற்று தொடர்ந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் போது, நேற்று இரவு சசிகாந்த் செந்திலுக்கு திடீரென ரத்த அழுத்தம் ஏற்பட்டது. இதனால், அவர் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சசிகாந்த் செந்திலை, உடல் நலம் கருதி, மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வலியுறுத்தினர்.

ஆனால், அவர் தொடர்ந்து, 3-வது நாளாக இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்தார். ஆகவே, சசிகாந்த் செந்திலின் உடல் நலம் மேலும் பாதிக்கப்படும் என்பதால், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் இன்று மதியம் சசிகாந்த் செந்திலை 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in