Published : 20 Jul 2018 11:20 AM
Last Updated : 20 Jul 2018 11:20 AM

மேட்டூர் அணை நீர் கடைமடைப் பகுதி வரை செல்ல தமிழக அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்: வாசன்

 மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படுகின்ற தண்ணீரானது கடைமடைப் பகுதி வரைச்சென்று விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன் தர தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில், “மேட்டூர் அணை வியாழக்கிழமை திறக்கப்பட்டதால் சம்பா பயிர் பாசனத்திற்கு தேவையான தண்ணீர் முழுமையாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் விவசாயிகள் கடந்த 7 ஆண்டுகளாக குறுவை சாகுபடியை இழந்து, 6 ஆண்டுகளாக சம்பா சாகுபடியை இழந்து வாடுகிறார்கள். இச்சூழலில் இந்த ஆண்டும் ஜூன் மாதம் திறக்க வேண்டிய மேட்டூர் அணை திறக்க முடியாமல் குறுவை சாகுபடியை மேற்கொள்ள முடியவில்லை.

இந்நிலையில் மேட்டூர் அணையில் நீர்மட்டம் சுமார் 109 அடிக்கு உயர்ந்த நிலையில் அணை திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கடைமடைப் பகுதி வரைச்சென்று விவசாயத் தொழிலுக்கு பயனுள்ளதாக இருக்க தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் உபரி நீரானது கடலில் சென்று கலக்காமல் இருப்பதற்கும், வீணாகாமல் இருப்பதற்கும், அதிகப்படியான தண்ணீர் வெளியேற்றப்படும் போது அத்தண்ணீரை ஏரி, குளம், குட்டைகளில் நிரப்புவதற்கும் உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

மேலும் நேரடி விதைப்பு செய்யும் விளைநிலங்களுக்கு அதிகப்படியான தண்ணீர் செல்லாமல் இருப்பதற்கும், பாசனப் பயிர்களுக்கு முறையாக, அளவான தண்ணீர் செல்வதற்கும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேட்டூர் அணையிலியிருந்து திறக்கப்படும் தண்ணீரை நம்பி சுமார் 17 லட்சம் ஏக்கரில் பாசனம் செய்கிறார்கள் விவசாயிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு ஏற்கெனவே குடிமராமத்துப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்த ரூபாய் 328 கோடியை அப்பணிக்காக மட்டும் முறையாக, சரியாக, உரிய நேரத்தில் செலவிட வேண்டும். அதாவது தற்போது மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஏரிகள், குளங்கள் உட்பட பல்வேறு நீர்நிலைகளில் நீர் செல்வதாலும், நீர் தேக்கமடைவதாலும் குடிமராமத்துப் பணிகளை இப்போது சரிவர செய்யமுடியாது.

அது மட்டுமல்ல தண்ணீர் வருகின்ற நேரத்திலோ, தண்ணீர் தேக்கமடையும் நேரத்திலோ குடிமராமத்து என்ற பெயரில் பணிகளை செய்தால் பணிகள் பாதிக்கப்படுவதோடு, குடிமராமத்துப் பணிகளுக்காக செய்த செலவும் பயனற்றதாகிவிடும். குறிப்பாக விவசாயத்திற்கும், குடிப்பதற்கும் பயன்படும் வகையில் மேற்கொள்ளப்படும் குடிமராமத்துப் பணிகள் பயனுள்ளதாக இருக்க வேண்டுமே தவிர விழலுக்கு இறைத்த நீர் போல் அமைந்துவிடக்கூடாது என விவசாயிகள் எண்ணுகிறார்கள்.

எனவே தற்போதுள்ள சூழலில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொண்டால் செலவு செய்கின்ற பணம் வீணாகி, மீண்டும் குடிமராமத்துப் பணிகளை செய்ய அதிக பணம் செலவழிக்க நேரிடும். எனவே குடிமராமத்துப்பணிகளை தற்காலிகமாக தள்ளிவைத்து ஜனவரி 2019 ல் மீண்டும் மேற்கொள்ளலாம்.

குறிப்பாக தற்போது திறக்கப்பட்டுள்ள மேட்டூர் அணையின் தண்ணீரானது கடைமடைப் பகுதி வரைச்சென்று விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன் தர வேண்டும் என்பதற்காக தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் சம்பா பாசனப்பயிர் செய்வதற்காக விவசாயிகள் கேட்கும் அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்” என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x