“மக்களுக்கு நல்லாட்சி வழங்கும் வரை எனக்கு தூக்கமில்லை” - எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி | கோப்புப் படம்
எடப்பாடி பழனிசாமி | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: “தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்கும் வரை அதிமுக தொண்டர்களுக்கும், எனக்கும் தூக்கமில்லை” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எனும் எனது எழுச்சிப் பயணத்தை கடந்த ஜூலை 7ம் தேதி தொடங்கி, இதுவரை 118 தொகுதிகளில் சுமார் 60 லட்சம் மக்களை சந்தித்துள்ளேன். இந்தப் பயணத்தின்போது சுமார் 6,728 கி.மீ தூரம் வரை பயணம் செய்து மக்களின் எண்ண ஓட்டங்களை உணர்ந்திருக்கிறேன்.

நான் சென்ற இடங்களில் எல்லாம், என்னை ஆர்வமுடன் சந்தித்த விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், வியாபாரிகள், மகளிர் சுயஉதவிக் குழுவினர், தீப்பெட்டி தொழிலாளர்கள், பட்டாசு தொழிலாளர்கள், ஏலகிரி மலைவாழ் பழங்குடியினர் என்று அனைவரையும் சந்தித்து, கலந்துரையாடும் நல்வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஒவ்வொருவரும் என்னை சந்திக்கும்போது, அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் குறித்தும், நல்லாட்சி குறித்தும் என்னுடன் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர்.

அதிமுக ஆட்சி அமைந்ததும், தாலிக்குத் தங்கம் திட்டத்துடன் சேர்த்து பட்டு வேட்டி, சேலை வழங்கப்படும். தீபாவளிக்கு மகளிருக்கு சேலை வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத ஏழை தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு இடம் வழங்கி, தரமான கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகளையும் வெளியிட்டேன். ஸ்டாலின் அரசின் மீது தமிழக மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். திமுக அரசு, தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லத் தவறிவிட்டது. ஸ்டாலினால் இன்று, மக்களின் வாழ்வாதாரம் கண்ணீரும், வலியுமாக மாறிவிட்டது. நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை 51 மாதங்களுக்கு மேல் ஏமாற்றிவிட்டார்.

`நானும் ஓய்வெடுக்கப் போவதில்லை; உங்களையும் ஓய்வெடுக்க விடப்போவதில்லை’ என்று போலி நம்பிக்கையில் இருக்கும் ஸ்டாலின் 2026-ல் இருந்து நிரந்தரமாக ஓய்வெடுக்கப் போகிறார். தமிழகத்தை பீடித்திருக்கும் துயரத்துக்கு 2026-ல் முடிவுரை எழுதுவோம். குடும்ப ஆட்சிக்கு ஒரே அடியாக முற்றுப்புள்ளி வைப்போம். மோசமான விளம்பர மாடல் போட்டோ ஷூட் ஸ்டாலின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம். ஜெயலலிதா மாடல் ஆட்சியை அரியணையில் ஏற்றுவோம்.

நமது எழுச்சிப் பயணத்துக்கு கிடைக்கும் பேராதரவையும், திரளும் மக்கள் வெள்ளத்தையும் பார்த்து, ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை. அதனால் நான், எம்ஜிஆர், ஜெயலலிதா போல் நினைத்துக்கொண்டு பேசுவதாகக் கூறுகிறார். `நான் மக்களில் ஒருவன். சாதாரண தொண்டன். முன்கள வீரனாக எமது எழுச்சிப் பயணம் தொடரும். தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்கும்வரை அதிமுக தொண்டர்களுக்கும், எனக்கும் தூக்கமில்லை. அயராது உழைப்போம். 2026 தேர்தலில் அதிமுக வெல்வது உறுதி. செல்லுமிடமெல்லாம் மக்களின் எழுச்சியே வெற்றிக்கு சாட்சி” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in