பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக பொதுநல வழக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும்: ஐகோர்ட்

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக பொதுநல வழக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும்: ஐகோர்ட்
Updated on
1 min read

சென்னை: பரந்தூர் விமான நிலையம் அமைக்க, ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள ஏரியை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுநல வழக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என நீதிபதி தெரிவித்ததை அடுத்து, இது சம்பந்தமாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தப் பகுதியில் 5 ஆயிரத்து 747 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், விமான நிலையம் அமைக்க ஏகனாபுரத்தில் உள்ள காளி ஏரியை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, காளி ஏரி நீர் பயன்படுத்துவோர் சங்கத்தின் சார்பில், அதன் தலைவர் கமலக்கண்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், விமான நிலையம் அமைக்க கையகப்படுத்த உள்ள 5,747 ஏக்கர் பரப்பில், 26.54 சதவீதம் நீர்நிலைகள் என்றும், ஏகனாபுரம் மக்கள் தங்கள் பாசன வசதிக்காக காளி ஏரியை மட்டும் நம்பியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

வருவாய் துறை உத்தரவின்படி, நீர்நிலைகளை, விவசாயம் சாராத பயன்பாட்டுக்காக மறுவகைப்படுத்த முடியாது எனவும், ஏகனாபுரம், காளி ஏரியை விவசாயம் சாராத பணிகளுக்காகவோ, வர்த்தக பயன்பாட்டுக்காகவோ வகைமாற்றம் செய்யக் கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முகமது ஷபீக், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும், பொதுநல வழக்காக மட்டுமே தாக்கல் செய்ய முடியும் எனவும் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in