Published : 22 Jul 2018 04:22 PM
Last Updated : 22 Jul 2018 04:22 PM

காவிரி வெள்ளத்தில் சிக்கிய 4 பேர் சடலங்களாக மீட்பு

காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும் நிலையில் சேலம் மாவட்டத்தில் ஆற்றில் குளித்த 5 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அவர்களில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது, கர்நாடக மாநிலம் கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து காவிரியில் அதிக அளவு நீர் திறக்கப்பட்டு வருவதால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து இன்று 80 ஆயிரத்து 833 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 47 ஆயிரத்து 500 கன அடி தண்ணீரும் கபினி அணையில் இருந்து 33 ஆயிரத்து 333 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 116 அடியை கடந்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் வெளியேற்றத்தைவிட, வரத்து அதிகமாக இருப்பதால் நாளை (23-ம் தேதி) மாலைக்குள் அணை முழுக்கொள்ளளவான 120 அடியை எட்ட வாய்ப்புள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகின்றது. இதனால், ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், டெட்டியூர் என்ற பகுதியில் இன்று ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த 4 பெண்கள் உட்பட 5 பேரை தண்ணீர் அடித்துச் சென்றது. அவர்கள் 4 பேரையும் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தேடி வந்தனர். அவர்களில் வாணிஸ்ரீ, மைதிலி சரவணன், ரவீனா ஆகிய 4 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் மாயமான ஹரிஹரனை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x