சென்னை: வாக்காளர் பட்டியல் புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - அறிக்கை கோரி மனு

சென்னை: வாக்காளர் பட்டியல் புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - அறிக்கை கோரி மனு
Updated on
1 min read

சென்னை: வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்திருப்பதாக எழுந்த புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், விசாரணை குறித்த முழு விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற 17வது மக்களவைத் தேர்தலில், வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள், ஒரே முகவரியில் அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் என மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த குற்றச்சாட்டிற்கு இந்திய தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்காமல், ராகுல் காந்தியை மிரட்டும் வகையில் நோட்டீஸ் அனுப்புவது ஜனநாயக அமைப்புகளை பலவீனப்படுத்தும் என்பதால் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு தீர்வு காண வேண்டும் எனக் கோரி கோடம்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் வெங்கட சிவகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த மனுவில், அனைத்து தொகுதிகளுக்குமான வாக்காளர் பட்டியல் தரவுகளை, பொதுமக்கள் பார்வைக்கு இணையத்தில் pdf வடிவில் வெளியிட உத்தரவிட வேண்டும் என்றும் வாக்காளர் பட்டியல் மோசடி புகார்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், விசாரணைகள் குறித்த முழுமையான அறிக்கையை தாக்கல் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரியிருந்தார். இந்த பொது நல வழக்கு விரைவில் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in