

சென்னையில் நடந்த மஹாவீர் ஜெயந்தி விழாவில் ஆயிரக்கணக்கான ஜெயின் மதத்தினர் பங்கேற்றனர்.
மஹாவீரரின் 2613- ம் ஆண்டு பிறந்த நாள் விழா ஞாயிறன்று இந்தியா முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. சென்னையில் இயங்கும் ஸ்ரீஜெயின் மகாசங் சார்பில், சென்னையில் மஹாவீரரின் பிறந்த நாள், அகிம்சை நாள் விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவின் ஒரு பகுதியாக, காலை 8 மணிக்கு, செளகார் பேட்டை -மின்ட் தெருவில் உள்ள ஸ்ரீஜெயின் ஆராதனா பவனி லிருந்து புறப்பட்ட அகிம்சை ஊர்வலம், ஓட்டேரி- கொன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீஜெயின் தாதவாடியை காலை 10.30 மணிக்கு அடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான ஜெயின் சமூகத்தினர் கலந்துகொண்டனர்.
மஹாவீரரின் வாழ்க்கை வரலாறை படம்பிடித்துக் காட்டும் புகைப்படங்கள், ஓவியங்கள் உள் ளிட்டவை அடங்கிய ஏழு வாகனங்கள் இந்த ஊர்வலத்தில் இடம்பெற்றிருந்தன. ஸ்ரீஜெயின் தாதவாடி வளாகத்தில் நடந்த அகிம்சை நாள் விழாவில், ஸ்ரீமத் விஜய் அஜீத்சேகர் சுரீஸ்வர்ஜீ, ஸ்ரீமத் விஜய் முகுடிபிரபா சுரீஸ் வர்ஜீ உள்ளிட்ட ஜெயின் மத துறவிகள் ஆசிகள் வழங்கினர்.
இந்த விழாவில், தமிழக பால் வளத்துறை அமைச்சர் மாதவரம் வி. மூர்த்தி, சென்னை மாநகராட்சி மேயர் சைதை சா.துரைசாமி மற்றும் ஜெயின் மத அமைப்புகளைச் சேர்ந்த பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.