

சென்னை: தமிழகத்தில் 30 சதவீத மானியத்துடன்,, உழவர் நல சேவை மையங்களை அமைக்க வேளாண் பட்டதாரிகள் முன்வர வேண்டும் என, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: உழவர்களின் நலன் காக்கும் பல்வேறு திட்டங்கள் அரசால் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, வேளாண் பட்டய மற்றும் பட்டப் படிப்பை முடித்த இளைஞர்களின் திறன் உழவர்களுக்கு உதவியாக இருந்து உற்பத்தியை உயர்த்தும் வகையில், முதல்வரின் உழவர் நல சேவை மையங்கள் 1,000 அமைக்கப்படும் என்று, 2025-26-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இதற்காக, ரூ.42 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், ரூ.10 முதல் ரூ.20 லட்சம் மதிப்பில் உழவர்நல சேவை மையங்கள் அமைக்க 30 சதவீத மானியமாக ரூ.3 முதல் ரூ.6 லட்சம் வரை வழங்கப்படும். இந்த மையங்களில் உழவர்களுக்கு தேவையான விதைகள், உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்கள் விற்பனை செய்யப்படுவதோடு, பயிர்களில் ஏற்படும் பூச்சி, நோய் மேலாண்மைக்குத் தேவையான ஆலோசனைகளும் வழங்கப்படும். மேலும், நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டுதல் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படும்.
இதுதவிர, முதல்வரின் உழவர் நல சேவை மையங்கள் மூலம் விவசாயிகள் ஒரே இடத்தில் அனைத்து சேவைகளையும் பெற முடியும். வேலையில்லா வேளாண் பட்டதாரிகள் சுயதொழில் செய்வதற்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது. இதில், இணையும் பயனாளிகளின் தொழில்நுட்ப திறனை மேம்படுத்தும் வகையில் பயிற்சியும் அளிக்கப்படும். எனவே, இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் 20 முதல் 45 வயதுக்குட்பட்டோர்கள் வங்கியில் விரிவான திட்ட அறிக்கையுடன் கடன் பெற விண்ணப்பிக்க வேண்டும்.
வங்கி நடைமுறைகளை பின்பற்றி கடன் ஒப்புதல் பெற்ற பின்பு மானிய உதவி பெற https://www.tnagrisnet.tn.gov.in/KaviaDP/register என்ற இணையதள முகவரியில் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம். முதல்வரின் உழவர் நல சேவை மையங்கள் அரசின் உதவியுடன் தொடங்கப்படும் சுயதொழில் என்பதால் இந்த அரிய வாய்ப்பை வேளாண் பட்டதாரிகள், பட்டயதாரிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.