

அரியலூர்: எதிர்க்கட்சி முதல்வர்கள், அமைச்சர்களை ஒடுக்கவே புதிய சட்ட மசோதாவை பாஜக அரசு கொண்டு வருகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.
அரியலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி இல்ல திருமணவிழாவில் இன்று (ஆக.20) பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்ளிடம் கூறியதாவது: இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்.9-ம் தேதி நடைபெற உள்ளநிலையில், தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
அவர் தமிழர். ஆகவே, தமிழ்நாட்டின் அனைத்து எம்.பி-களும் அவரை ஆதரிக்க வேண்டும் என்ற பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அவர் தமிழர் என்பதை விட, அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ்காரர் என்பதை அழுத்தமாக சொல்ல விரும்புகிறேன். ஆர்.எஸ்.எஸ் ராதாகிருஷ்ணனை ஆதரிக்கும் பேச்சுக்கே இடமில்லை.
இண்டியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டியை, தமிழ்நாட்டில் திமுக கூட்டணியின் எம்.பிக்கள் அனைவரும் ஆதரிப்பர். சுதர்சன் ரெட்டி ஆந்திராவில் இருந்து நிறுத்தப்பட்டுள்ள காரணத்தினால், ஆந்திராவின் அனைத்து எம்.பி-க்களும் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என சொன்னால் தேசிய ஜனநாயக கூட்டணியும், பாஜகவும் ஏற்றுக் கொள்ளுமா?ஆகவே,தமிழரை ஆதரிக்க வேண்டும் என்ற பிரச்சாரம் எந்த விதமான அழுத்தமும், அர்த்தமும் அற்றது.
அரியலூர் மாவட்டத்தை பொருத்தவரை 7 சிமென்ட் ஆலைகள் உள்ளன. இதில் சாதக - பாதகங்கள் உள்ளது. இங்குள்ள சுரங்கங்களில் மனிதர்கள் மற்றும் கால்நடைகள் உயிரிழப்பு ஏற்படுகிறது. பயன்பாட்டில் இல்லாத குவாரிகளை ஏரி, குளங்களில் உள்ளமண்ணை கொண்டு வந்து மூட வேண்டும்.
தூய்மை பணியாளர்களை பொருத்தவரை ஒவ்வொரு பிரச்சினையிலும் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு உண்டு. தூய்மைப் பணியாளர்களை பணிநிரந்தம் செய்யக்கூடாது என்பது திருமாவளவனின் கருத்து. எங்களைப் பொறுத்தவரை வேலை செய்து கொண்டிருப்பவர்களின், அடுத்த தலைமுறை அதே பணியில் இருக்க வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. தற்பொழுது பணி செய்பவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. அது நியாயமான ஒன்று.
பாஜக அரசை பொருத்தவரை எதிர்க்கட்சிகளை ஒடுக்குவது அல்லது மத்திய அரசுக்கு எதிராக கருத்து சொல்பவர்களை சட்டத்தின் மூலமாக ஒடுக்குவது, கைது செய்வது, சித்திரவதை செய்வது என ஜாமீனில் வெளிவர முடியாத பல புதிய சட்டங்களை இயற்றிக் கொண்டே இருக்கிறார்கள். ஜனநாயக விரோதமான பல சட்டங்களை கடந்த பத்தாண்டுகளில் பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது.
அவற்றையெல்லாம் எதிர்த்து போராட்டத்தை இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் எல்லாம் இணைந்து போராடும்.
அரசு கலைக்கல்லூரி மட்டுமல்ல. ஆரம்பப் பள்ளி முதல் கல்லூரி வரை பல்லாயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ளது. ஏற்கனவே நிரந்தர ஆசிரியர்கள் என்பதை விட தொகுப்பூதியம் மற்றும் மதிப்பூதியத்தின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள் அதிக அளவில் உள்ளனர். ஆகவே தரமான கல்வியை தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மாணவர்களுக்கு வழங்கும் வகையில் ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட வேண்டும்.
தொகுப்பூதியம் மற்றும் மதிப்பூதியத்தில், ஏற்கனவே டெட் தேர்வில் வென்று இருக்கக் கூடியவர்களுக்கு பணி வாய்ப்பை அரசு வழங்கிட வேண்டும். எடப்பாடி பழனிசாமிக்கு ஆம்புலன்ஸ் மீது கோபமா அல்லது வேறு யார் மீது உள்ள கோபத்தை, ஆம்புலன்ஸ் டிரைவர் மீது காண்பித்துள்ளாரா என தெரியவில்லை. உலகம் முழுவதுமே ஆம்புலன்ஸ் வந்தால் வழிவிட வேண்டும் என்பது எல்லாருமே கடைப்பிடிக்க வேண்டியது நியதி. ஆனால் எடப்பாடி பழனிசாமி ஒரு நாலாந்தர அரசியல்வாதியைப் போல பேசியுள்ளார். இது கண்டனத்துக்கு உரியது. இதற்கு அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். என்றார்.