

மதுரை: பதிவு பெற்ற சித்த மருத்துவர்களிடம் பயிற்சி பெற்ற சட்டப்பூர்வ வாரிசுகளை, சித்த மருத்துவர்களாக அங்கீகரிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை செல்லூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் ரங்கராஜன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: சித்த மருத்துவத்தில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற் படுத்தி வரும் கரோனாவுக்கும் சித்த மருத்துவத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் 2 அரசு சித்த மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் பிஎஸ்எம்எஸ் முடித்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. சித்த மருத்துவத்தைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பதிவு பெற்ற சித்த மருத்துவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகள் சித்த மருந்து தயாரிப்பு மற்றும் சிகிச்சை அளிப்பதில் பயிற்சி பெற்றவர்களாக உள்ளனர்.
பதிவு பெற்ற சித்த மருத்துவர்களிடம் பயிற்சி பெற்ற சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி, அவர்களை சித்த மருத்துவர்களாக அங்கீகரிக்கலாம். இது தொடர்பாக அரசுக்கு மனு அனுப்பினோம். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பதிவு பெற்ற சித்த மருத்துவர்களின் வாரிசுகளில் சித்த மருத்துவப் பயிற்சி பெற்றவர்களை சித்த மருத்துவர்களாக அறிவிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஏ.டி.மரிய கிளாட் அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மனுதாரர் கோரும் நிவாரணம் நீதித் துறையின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது. மருத்துவப் பயிற்சியாளர்கள், அவர்களுக்கு உரிய சட்ட விதிகளின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றனர். இது தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
மருத்துவ கவுன்சிலால் வெளியிடப்பட்ட சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் விதிகளின்படி, மருத்துவம் படித்தவர்கள் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். இதனால் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யப்பட்ட சித்த மருத்துவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளை, சித்த மருத்துவர்களாக அங்கீகரிக்க நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.