திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு: திண்டுக்கல், தென்காசியில் 10 இடங்களில் என்ஐஏ சோதனை!

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு: திண்டுக்கல், தென்காசியில் 10 இடங்களில் என்ஐஏ சோதனை!
Updated on
2 min read

சென்னை: திருபுவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக திண்டுக்கல், தென்காசி, கொடைக்கானல் உள்பட 10 இடங்களில் இன்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் இன்று திண்டுக்கல், தென்காசி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், வத்தலகுண்டு, வேடச்சந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 10 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொருளாளர் ஷேக் அப்துல்லா என்பவரின் வீட்டில் காலை முதல் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனைகளில் 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.

சோதனையின் பின்னணி என்ன? - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனத்தைச் சேர்ந்த பாமக நிர்வாகி ராமலிங்கம், இவர் பாத்திரக் கடை நடத்தி வந்தார். இவர் அப்பகுதியில் மதமாற்றத்தில் ஈடுபட்ட சிலரைக் கண்டித்துள்ளார். இதனையடுத்து, 2019 பிப்ரவரி 5ஆம் தேதி அவர் படுகொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து திருவிடைமருதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்குத் தொடர்பாக போலீஸார், குறிச்சிமலை பகுதியைச் சேர்ந்த முகமது ரியாஸ், திருபுவனத்தைச் சேர்ந்த நிஸாம் அலி, சர்புதீன், முகமது ரிஸ்வான், திருவிடைமருதூரைச் சேர்ந்த அசாருதீன், திருமங்கலக்குடியைச் சேர்ந்த முகமது தவ்பீக், முகமது பர்வீஸ், அவணியாபுரத்தைச் சேர்ந்த தவ்ஹித் பாட்சா, காரைக்கால் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த முகமது ஹசன் குத்தூஸ் உள்பட பலர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

இந்த படுகொலை குறித்து என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை என்ஐஏவுக்கு மாற்றி மத்திய உள்துறை உத்தரவிட்டது. இதையடுத்து அப்பிரிவு அதிகாரிகள், ராமலிங்கம் கொலை குறித்து புதிதாக ஒரு வழக்கை பதிவு செய்து, துப்பு துலக்க ஆரம்பித்தனர்.

இதன் பின்னர் என்ஐஏ அதிகாரிகளும் மேலும் பலரை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வரும் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா (37), கும்பகோணம் மேலக்காவேரி பகுதியைச் சேர்ந்த அப்துல் மஜீத் (37), தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வடக்குமாங்குடி பகுதியைச் சேர்ந்த புர்ஹானுதீன் (31), திருமங்கலகுடி பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது (30), அதேப் பகுதியைச் சேர்ந்த நஃபீல் ஹாசன் (31) ஆகிய 5 பேர் குறித்து தகவல் தெரிவித்தால் ஒரு நபருக்கு ரூ.5 லட்சம் என்ற வீதத்தில் 5 பேருக்கும் சேர்த்து ரூ.25 லட்சம் பரிசு வழங்கப்படும் என என்ஐஏ கடந்த 2021ஆம் ஆண்டு அறிவித்தது.

வழக்கில் தலைமறைவாக இருந்த 5 பேர் உள்பட 18 பேர் மீது என்ஐஏ அதிகாரிகள், சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதேநேரத்தில் தலைமறைவாக இருக்கும் நபர்களை கைது செய்ய பல்வேறு கோணங்களில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தேடப்பட்டு வந்த முகமது அலி ஜின்னா கடந்த நவம்பர் 15 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

மேலும், இவ்வழக்கில் முக்கிய நபராக கருதப்பட்ட அப்துல் மஜீத், சாகுல் ஹமீது ஆகிய இருவரையும் ஜனவரி மாதம் என்ஐஏ போலீஸார் சென்னையில் கைது செய்தனர். இந்த வழக்கை மிகத் தீவிரமாக என்ஐஏ விசாரித்து வரும் நிலையில், இந்த சோதனைகள் நடந்து வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in