தமிழகத்தில் நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் மூலதனச் செலவு 17.57% குறைவு: அன்புமணி

அன்புமணி ராமதாஸ் | கோப்புப் படம்
அன்புமணி ராமதாஸ் | கோப்புப் படம்
Updated on
2 min read

சென்னை: வளர்ச்சிக்குத் தேவையான மூலதனச் செலவுகளை செய்வதில் பின் தங்கியிருக்கும் திமுக அரசு வீண் செலவுகளை செய்வதில் மட்டும் தான் முதலிடத்தில் இருக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழக அரசின் சார்பில் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மூலதனங்களை உருவாக்குவதற்காக ரூ.4,155.74 கோடி மட்டும் தான் செலவிடப்பட்டிருக்கிறது என்றும், இது முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில் செலவிடப்பட்ட ரூ.5,041.90 கோடியை விட ரூ.886.16 கோடி, அதாவது 17.57% குறைவு என்றும் இந்திய தலைமைக் கணக்காயர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் மூலதனச் செலவுகள் அதிகரித்திருக்கும் நிலையில் தமிழகத்தில் குறைந்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

சாலைகள், பாலங்கள், பாசனக் கட்டமைப்புகள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட சொத்துகளை உருவாக்குவதற்காகவும், பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்வதற்காகவும் செய்யப் படும் செலவுகள் மூலதனச் செலவுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த செலவுகள் மூலம் உருவாக்கப்படும் சொத்துகள் எதிர்காலத்தில் அரசுக்கு வருவாயை ஏற்படுத்தித் தரக்கூடியவை என்பதாலும், அதிக அளவில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடியவை என்பதாலும் மூலதனச் செலவுகள் அதிகரிப்பது ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. இத்தகைய மூலதனச் செலவுகளை செய்வதற்காகத் தான் மாநில அரசுகள் கடன் வாங்க அனுமதிக்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மூலதனச் செலவுகளை ஆந்திர அரசு 267 விழுக்காடும், ஹரியானா அரசு 103 விழுக்காடும், குஜராத் அரசு 65 விழுக்காடும் அதிகரித்திருக்கின்றன. தமிழ்நாடு அரசு அந்த அளவுக்கு அதிகரிக்கவில்லை என்றாலும் கூட, நடப்பாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகையை மட்டுமாவது காலாண்டு சராசரியின் அடிப்படையில் செலவு செய்திருக்க வேண்டும். ஆனால், அதைக் கூட திராவிட மாடல் அரசு செய்யவில்லை என்பது அதன் நிர்வாகத் திறமையின்மையையே காட்டுகிறது.

2025- 26ம் நிதியாண்டில் மூலதனச் செலவுகளுக்காக ரூ.57,230.96 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் ஒரு காலாண்டிற்கு சராசரியாக ரூ.14,307.74 கோடி செலவிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், முதல் காலாண்டில் செலவிடப்பட வேண்டிய தொகையை விட பத்தாயிரம் கோடிக்கும் குறைவாகவே செலவிடப் பட்டுள்ளது. இதன் பொருள் வளர்ச்சித் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்பது தான்.

அண்டை மாநிலமான கர்நாடகத்தின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பு தமிழகத்தை விட குறைவு ஆகும். ஆனாலும் அரசின் வருவாயை பெருக்கியதன் மூலம் நடப்பாண்டின் மொத்த பட்ஜெட் மதிப்பை தமிழகத்திற்கு இணையாக ரூ.4.10 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது. அதுமட்டுமின்றி, அதில் 20.10 விழுக்காட்டை, அதாவது ரூ.83,200 கோடியை மூலதனச் செலவுகளுக்காக ஒதுக்கீடு செய்திருக்கிறது. தமிழக அரசும் அதன் மொத்த பட்ஜெட் மதிப்பான ரூ.4.30 லட்சம் கோடியில் 20.1% ஒதுக்கீடு செய்திருந்தால் தமிழகத்தில் மூலதனச் செலவுகளுக்காக ரூ.86,516 கோடி கிடைத்திருக்கும். ஆனால், அதில் சுமார் நான்கில் 3 பங்குக்கும் குறைவாகவே தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இது தமிழகத்தின் விரைவான வளர்ச்சிக்கு உதவி செய்யாது.

ஒரு மாநில அரசு எந்த அளவுக்கு மூலதனச் செலவுகளை செய்கிறதோ, அந்த அளவுக்குத் தான் கடன் வாங்க வேண்டும் என்பது விதி ஆகும். ஆனால், நடப்பு நிதியாண்டில் தமிழக அரசு செய்ய உத்தேசித்துள்ள மூலதனச் செலவுகளின் மதிப்பு ரூ.57,230 கோடி மட்டும் தான். ஆனால், நடப்பாண்டில் தமிழக அரசு வாங்கவிருக்கும் மொத்தக் கடனின் மதிப்பு ரூ.1,62,096.76 கோடி ஆகும். இதில் கடந்த காலங்களில் வாங்கிய கடனில் ரூ.55,844.53 கோடியை தமிழக அரசு திரும்பச் செலுத்தப் போகிறது. அப்படியானால், மீதமுள்ள ரூ.1,06,252 கோடியை மூலதன செலவுகளுக்காகத் தான் தமிழக அரசு பயன்படுத்த வேண்டும் அல்லது தமிழக அரசின் மூலதன செலவான ரூ.57,230.96 கோடி அளவுக்கு மட்டும் தான் கடன் வாங்க வேண்டும்.

ஆனால், தமிழக அரசு செய்யும் வீண் செலவுகளின் காரணமாகத் தான் மூலதனச் செலவுகளை விட இரு மடங்கு தொகையை கடனாக வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு மாநில அரசு அதன் ஊழியர்களுக்கான ஊதியம், ஓய்வூதியங்கள், ஏற்கனவே வாங்கிய கடனுக்கான வட்டி, இயக்கச் செலவுகள், மானியங்கள் உள்ளிட்ட வருவாய் செலவுகளை அதன் வருவாய் வரவுகளில் இருந்து தான் செய்ய வேண்டும். நிதிப் பொறுப்பு மற்றும் நிதி நிலை மேலாண்மை சட்டத்தின்படி வருவாய் பற்றாக்குறை என்பதே இருக்கக் கூடாது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வருவாய்ப் பற்றாக்குறையை ஒழித்து வருவாய் உபரியை ஏற்படுத்துவோம் என்று திமுக கூறி வந்தது. ஆட்சிக்கு வந்து இதுவரை 5 நிதி நிலை அறிக்கைகளை திமுக அரசு தாக்கல் செய்திருக்கிறது. ஆனால், இன்னும் வருவாய்ப் பற்றாக்குறையை ஒழிக்க முடியவில்லை. நடப்பாண்டில் மட்டும் ரூ.41,634.93 கோடி வருவாய் பற்றாக்குறையை திமுக அரசு ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் தான் வாங்கிய கடனில் பாதியைக் கூட மூலதனச் செலவுகளுக்காக செலவிட முடியவில்லை.

பொருளாதாரத்தில் சாதனைப் படைத்து விட்டதாக வீண் விளம்பரம் செய்து வரும் தமிழக அரசு, உண்மையில் மக்களின் வரிப் பணத்தை வீணடித்து வருகிறது. வளர்ச்சிக்குத் தேவையான மூலதனச் செலவுகளை செய்வதில் பின் தங்கியிருக்கும் திமுக அரசு வீண் செலவுகளை செய்வதில் மட்டும் தான் முதலிடத்தில் இருக்கிறது. திமுகவின் இந்த மக்கள் விரோத நிர்வாகத்திற்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்" என்று அன்புமணி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in