விவசாயிகள் விண்ணப்பித்ததும் பயிர் கடன் வழங்கும் திட்டம் - முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கம்

விவசாயிகள் விண்ணப்பித்ததும் பயிர் கடன் வழங்கும் திட்டம் - முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கம்
Updated on
1 min read

தருமபுரி: விவசாயிகள் இணைய வழியில் விண்ணப்பித்த உடனேயே பயிர்கடன் வழங்கும் மாநில அளவிலான திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தருமபுரி மாவட்டத்தில் இன்று தொடங்கி வைத்தார்.

விவசாயிகள் இணைய வழியில் விண்ணப்பித்த உடனேயே பயிர்கடன் வழங்கும் மாநில அளவிலான திட்டத்தின் தொடக்க விழா தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான் கோட்டையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் இன்று நடைபெற்றது.
கூட்டுறவுத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், இணைய வழியில் பயிர் கடன் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர், அந்த வளாகத்தில் செயல்படும் இ-சேவை மையத்தை நேரில் ஆய்வு செய்து விவரங்களை கேட்டறிந்தார்.

இந்நிகழ்ச்சியில், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஏ.வ.வேலு, சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் சதீஸ், தருமபுரி எம்.பி மணி, முன்னாள் அமைச்சர் பழனியப்பன், முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதன் பிறகு, தடங்கம் ஊராட்சியில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க முதல்வர் புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக, தருமபுரி அடுத்த ஒட்டப்பட்டி அவ்வை வழி பகுதியில், ஒன்றிய முன்னாள் அமைச்சர் முரசொலி மாறன் பிறந்த நாளையொட்டி அவரது உருவப் படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், முரசொலி மாறனின் பிறந்த நாளையொட்டி மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், "எளிய வேளாண் குடும்பத்தில் தியாகராஜ சுந்தரமாகத் தோன்றி, கலைஞரின் தோளில் வளர்ந்து, அவரால் நெடுமாறன் எனப் பெயர்மாற்றமும் பெற்று, அவரின் மனசாட்சியாகவே திகழ்ந்து, இந்திய ஒன்றியத்தின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக ஏற்றமும் கண்ட மதிப்புக்குரிய முரசொலி மாறன் அவர்களின் பிறந்தநாள்...

இதழியல், திரைப்படம், அரசியல் எனக் களம்கண்ட அனைத்துத் துறைகளிலும் தனிமுத்திரை பதித்து; திராவிட இயக்க வரலாறு, ஏன் வேண்டும் இன்பத் திராவிடம்?, மாநில சுயாட்சி எனக் காலவெள்ளத்தில் கரைந்திடாக் கருத்துக் கருவூலங்களை நமக்காக வழங்கிச் சென்றிருக்கும் அவரது பணிகளை நன்றியோடு நினைவுகூர்ந்து வணங்குகிறேன்!" என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in