ஒரத்தநாடு அருகே அரசுப் பள்ளிக்கு ரூ.2 கோடி இடத்தை இலவசமாக வழங்கிய தொழிலதிபர்!

தஞ்சாவூர் மாவட்டம் திருமங்கலக்கோட்டை கீழையூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.2 கோடி மதிப்பிலான இடத்துக்கான பத்திரத்தை  வட்டார கல்வி வளர்ச்சி குழு அறக்கட்டளை நிர்வாகிகளிடம் நேற்று வழங்கிய தொழிலதிபர் பொன்.கோவிந்தராஜ்.
தஞ்சாவூர் மாவட்டம் திருமங்கலக்கோட்டை கீழையூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.2 கோடி மதிப்பிலான இடத்துக்கான பத்திரத்தை வட்டார கல்வி வளர்ச்சி குழு அறக்கட்டளை நிர்வாகிகளிடம் நேற்று வழங்கிய தொழிலதிபர் பொன்.கோவிந்தராஜ்.
Updated on
1 min read

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே அரசுப் பள்ளிக்கு ரூ.2 கோடி மதிப்பிலான இடத்தை சிங்கப்பூர் தொழிலதிபர் பொன்.கோவிந்தராஜ் இலவசமாக வழங்கினார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே திருமங்கலக்கோட்டை கீழையூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது.

இப்பள்ளியில், திருமங்கலக்கோட்டை கீழையூர், மேலையூர், அருமுளை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 250 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் வளர்ச்சிக்காக கிராம மக்கள், வெளிநாட்டில் உள்ளவர்கள், முன்னாள் மாணவர்கள் என பலரும் இணைந்து ‘திருமங்கலக்கோட்டை வட்டார கல்வி வளர்ச்சி குழு அறக்கட்டளை’ ஒன்றை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருமங்கலக் கோட்டை கீழையூரைச் சேர்ந்த தொழிலதிபர் பொன்.கோவிந்த ராஜ்(80), பள்ளியின் இட நெருக்கடியை போக்கும் விதமாக, சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான 30 ஆயிரம் சதுர அடி நிலத்தை தானமாக வழங்கினார்.

இதற்கான ஆவணத்தை கோவிந்தராஜ் நேற்று பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், திருமங்கலக்கோட்டை வட்டார கல்வி வளர்ச்சி குழு அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்களிடம் வழங்கினார். அவரை பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டினர்.

விழாவில் கோவிந்தராஜ் பேசியது: மாணவர்களாகிய உங்களை படிப்பு மட்டுமே உயர்த்தும். மாணவர்கள் நன்றாக படித்து ஊருக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து திருமங்கலக் கோட்டை வட்டார கல்வி வளர்ச்சி குழு அறக்கட்டளை நிர்வாகிகள் கூறியது: எங்கள் அறக்கட்டளை மூலம் முதற்கட்டமாக பள்ளிக்கு வாகனம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, எங்களை ஊரைச் சேர்ந்த கோவிந்தராஜ் 30 ஆயிரம் சதுர அடி இடத்தை தானமாக வழங்கி இருப்பது பெருமையாக உள்ளது என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in