“முதல்வர் ஸ்டாலினுக்கு திரைப்படம் பார்ப்பதற்கே பொழுதுகள் போதவில்லை” - அன்புமணி விமர்சனம்

அன்புமணி ராமதாஸ் | கோப்புப் படம்
அன்புமணி ராமதாஸ் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: அடக்குமுறையை ஏவி தூய்மைப் பணியாளர்களை அகற்றிய திமுக அரசை ஆட்சியில் இருந்து அகற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சென்னையில் ராயபுரம், திரு.வி.க நகர் ஆகிய மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி தனியாருக்கு வழங்கப்பட்டதைக் கண்டித்தும், தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வலியுறுத்தியும் சென்னை மாநாகராட்சி அலுவலகத்திற்கு அருகில் அறவழியில் கடந்த 13 நாள்களாக போராட்டம் நடத்தி வந்த தூய்மைப் பணியாளர்களை காவல் துறையினரைக் கொண்டு நள்ளிரவில் கைது செய்து தமிழக அரசு அப்புறப்படுத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உரிமை கேட்டு போராடுபவர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது; மன்னிக்க முடியாதது.

தமிழக அரசு நினைத்திருந்தால் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்துக்கு முதல் நாளிலேயே தீர்வு கண்டிருக்க முடியும். சென்னை மாநகரில் குப்பை அகற்றும் பணியை மாநகராட்சியே மேற்கொள்ள வேண்டும்; தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்பது தான் அவர்களின் கோரிக்கை. இதை நிறைவேற்றுவதில் அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை. இன்னும் கேட்டால் குப்பை அகற்றும் தனியார் நிறுவனத்திற்கு தரும் தொகையில் தூய்மைப் பணிகளை இன்னும் சிறப்பாக செய்ய முடிவதுடன், அவர்களுக்கு கூடுதல் ஊதியமும் வழங்க முடியும். ஆனால், அதைச் செய்ய அரசுக்கு மனமில்லை.

தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 13-ம் நாளாக நீடித்த நிலையில், போராட்டக் குழுவினரை முதல்வர் ஸ்டாலின் அழைத்து பேசியிருக்க வேண்டும். அவ்வாறு பேசியிருந்தால் இந்த சிக்கலுக்கு தீர்வு கிடைத்திருக்கக் கூடும். ஆனால், முதல்வருக்கோ திரைப்படங்களைப் பார்ப்பதற்கே பொழுதுகள் போதவில்லை. ஒருவேளை சமூக நீதியில் சிறந்த ஸ்டாலின் தூய்மைப் பணியாளர்களை சந்தித்துப் பேசுவது தமக்கு தகுதி குறைவு என்று நினைத்து விட்டாரோ என்னவோ?

ஒன்று மட்டும் உறுதி. ஏழை, எளிய மக்களான தூய்மைப் பணியாளர்களை அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு அகற்றுவது வீரம் அல்ல... கோழைத்தனம். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தான் வீரம் ஆகும். அதை செய்யாமல் அடக்குமுறையை ஏவி அவர்களை அகற்றிய திமுக அரசை தமிழக மக்கள் அகற்றும் நாள் வெகுதொலைவில் இல்லை” என்று அன்புமணி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in