தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு முதல் ரூ.10 லட்சம் காப்பீடு வரை: தமிழக அரசின் 6 அறிவிப்புகள்

அமைச்சர் தங்கம் தென்னரசு | கோப்புப் படம்.
அமைச்சர் தங்கம் தென்னரசு | கோப்புப் படம்.
Updated on
1 min read

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் நலனுக்காக 6 சிறப்புத் திட்டங்களை நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

முன்னதாக, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்திவந்த தூய்மைப் பணியாளர்கள், அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்கள் என 600-க்கும் மேற்பட்டோரை நள்ளிரவில் கைது செய்து, காவல் துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இந்தச் சம்பவத்துக்கு அதிமுக, சிபிஎம், தேமுதிக, தவெக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ள நிலையில், தூய்மைப் பணியாளர்கள் நலனுக்காக 6 முடிவுகள் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவித்தார்.

அப்போது அவர், “தூய்மை பணியாளர்கள் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி கரிசனத்துடன் இருக்கிறார். தூய்மை பணியாளர்களின் நலனை காப்பதில் அரசு உறுதியாக உள்ளது.தூய்மை பணியாளர்களின் நலவாரியம் சிறப்பாக செயல்படுவதை அரசு உறுதி செய்துள்ளது.” என்று கூறினார்.

அமைச்சர் வெளியிட்ட 6 அறிவிப்புகளின் விவரம் வருமாறு:1. தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை கையாளும் போது அவர்களுக்கு நுரையீரல் மற்றும் தோல் சம்பந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தகைய தொழில் சார் நோய்களை கண்டறியவும், சிகிச்சை அளிக்கவும் தனித் திட்டம் ஒன்று நிறைவேற்றப்படும்.

2. தூய்மைப் பணியாளர்கள் பணியின்போது உயிரிழந்தால், தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத்தின் மூலம் நிதியுதவி வழங்கப்படுகிறது. அவர்களின் குடும்பங்களின் நலனையும், வாழ்வாதாரத்தையும் முழுமையாக உறுதி செய்யும் வகையில் இந்த நிதி உதவியுடன் கூடுதலாக ரூ.5 லட்சம் காப்பீடு இலவசமாக ஏற்படுத்தித் தரப்படும். இதனால், தூய்மைப் பணியாளர்கள் பணியின்போது உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு கிடைக்கும்.

3. தூய்மைப் பணியாளர்கள் அவர்களின் குடும்பத்தினரின் சமூக, பொருளாதார நிலையை உயர்த்திட, அவர்கள் சுய தொழில் தொடங்கும்போது அத்தொழில் திட்ட மதிப்பீட்டில் 35% தொகை அதிகபட்சமாக ரூ.3,50,000 மானியமாக வழங்கப்படும். கடனை திருப்பிச் செலுத்த ஏதுவாக 6% வட்டி மானியமும் வழங்கப்படும்.

4. தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்காக புதிய உயர்கல்வி உதவித் தொகை திட்டம் செயல்படுத்தப்படும்.

5. நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத தூய்மைப் பணியாளர்களுக்கு, வரும் 3 ஆண்டுகளில், தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம் உதவியோடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டங்கள் மூலம் 30 ஆயிரம் குடியிருப்புகள் கட்டித் தரப்படும். கிராமப்புறங்களில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீட்டில் தூய்மை பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

6. நகர்ப்புற தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு அந்தந்த நகராட்சிகளின் மூலம் இலவசமாக வழங்கப்படும். இத்திட்டம் முதலில் சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக மற்ற நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in