சொத்துவரி முறைகேட்டில் கைதான மதுரை மேயரின் கணவருக்கு நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் பொன் வசந்த் | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மருத்துவமனையில் பொன் வசந்த் | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
Updated on
1 min read

மதுரை: சொத்துவரி முறைகேடு வழக்கில் கைதான மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி கணவர் பொன் வசந்த் நெஞ்சுவலி காரணமாக சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேட்டில் 2 உதவி ஆணையாளர்கள், வரிவிதிப்புக் குழு தலைவர் உள்பட இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த்தையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இன்று அதிகாலை அவரை 6.30 மணிக்கு மதுரை அழைத்து வந்த போலீஸார், நேரடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவப் பரிசோதனை செய்தனர். அப்போது அவர் தனக்கு நெஞ்சுவலி, படபடப்பு இருப்பதாகவும், மேலும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தமும் இருப்பதாக கூறியுள்ளார்.

உடனடியாக மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்துள்ளனர். அவருக்கு இசிஜி-யில் மாற்றம் இருந்ததால் எக்கோ பரிசோதனையும் செய்தனர். மேலும், அவர் தனக்கு தலைசுற்றலும், மயக்கமும் ஏற்படுவதாக கூறியதால் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்படுகிறது. அவர் சிகிச்சை பெறும் வார்டில் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் 10 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேயர் இந்திராணி அதிகாலையில் தனது சொந்த காரில், மருத்துவமனைக்கு சென்று கணவர் பொன் வசந்த்தை பார்த்து அழுதுள்ளார். அவருக்கு அவரது ஆதரவாளர்கள் ஆறுதல் கூறி, வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சொத்துவரி விதிப்புக்குழு தலைவர் விஜயலட்சுமி கணவர் கண்ணன், வாக்குமூலத்தில் தனது பெயர் இடம்பெற்றதுமே, பொன் வசந்த் சென்னை சென்றுள்ளார். இந்த வழக்கில் இருந்து தப்பிக்க பொன் வசந்த், சென்னையில் முகாமிட்டிருந்தார். ஆனால், திமுக தலைவர்களையும், அமைச்சர்களையும் அவரை சந்திக்க கூட மறுத்ததாக கூறப்படுகிறது. அனைவரும் கைவிட்ட நிலையிலே மத்திய குற்றப் பிரிவு போலீஸார் சென்னை சென்று அவரை கைது செய்துள்ளனர். சென்னையில் இருந்து அவரை மதுரைக்கு அழைத்து வந்த நிலையில், தன் மீது எந்த தவறும் இல்லை என்று அவர் போலீஸாரிடம் கூறியுள்ளார்.

மேலும், சென்னையில் இருந்து மதுரை வரும் வரை, கடைசி நேரத்தில் செல்போனில், பலரை தொடர்புகொள்ள முயற்சித்துள்ளார். ஆனாலும், யாரும் உதவவில்லை என்று கூறப்படுகிறது. இந்த வழக்கில் பொன் வசந்த் வாக்குமூலத்தை பொறுத்தும், அவர் வழங்கும் ஆதாரங்கள் அடிப்படையில் மேலும் பல திமுக, அதிமுக உள்ளிட்ட சில கட்சிகளின் கவுன்சிலர்கள் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in